செய்திகள்

வடக்கு, கிழக்கில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அற்றநிலை: அமைச்சர் சத்தியலிங்கம்

வடக்கு, கிழக்கு பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அற்ற நிலை காணப்படுகின்றது என வடமாகாண சுகாதார மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா காமினி வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நுகர்வார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நுகர்வோர் பாதுகர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு எமது வடமாகாணத்துடன் ஒப்பிடுகையில் தென்பகுதியில் அதிகமாக இருக்கின்றது. எங்களுடைய மாகாணத்தில் நீண்டகால யுத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் சகலவற்றையும் இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்து இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அப்படியான சமூகம் வாழும் இந்த மாகாணத்தில் அவர்கள் தங்களுக்கு இருக்கின்ற பொருளாதார வளங்களை அடிப்படையாகக் கொண்டு தமது வருமானத்தை அடிப்படையாக கொண்டு குறைந்த செலவில் வளமாக வாழ்க்கை நடத்த நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். எங்களுடைய மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிபுணர்வு அற்ற மற்றும் குறைந்த நிலையில் காணப்படுவதால் பல மோசடியான வியாபாரங்கள் இடம்பெறுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. எங்களுடைய மாகாணங்களில் நுகர்வோர் அதிகார சபை நுகர்வோருக்குரிய உரிமைகளை நினைவுபடுத்தி அவர்களை அதனை பயன்படுத்தச் செய்ய வேண்டிய பொறுப்பு இந்த அதிகாரசபைக்கு இருக்கின்றது. அந்த வகையில் நுகர்வோர் பாதுகாப்பு வார நிகழ்வு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. அதனை முதன்முதலாக வடமாகாணத்தில் ஆரம்பித்தது மிகவும் சிறப்பானது.

எமது மாகாணத்தில் மக்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்டோர், நாற்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட விதவைக் குடும்பங்கள், தாய்- தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள், பிள்ளைகள் அனைவரையும் இழந்த பெற்றோர், புனர்வாழ்வு பெற்ற பதினைந்தாயிரம் முன்னாள் போராளிகள், ஏனையவர்களில் கவனிப்பு தேவையான பல முதியோர்கள் இருக்கின்றார்கள் இப்படியாக நாம் பார்த்தால் எமது மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட மக்கள் அதிக கவனம் தேவைப்படும் மக்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்களது வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றால் பொருளாதாரம் மிகவும் முக்கியம்.

யுத்தம் முடிவடைந்து 7 வருடம் கடந்த போதும் எமது மக்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவில்லை. அந்த வைகயில் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சு இந்த மக்கள் பொருளாதார ரீதியாக முன்னே இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. பல இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றார்கனள். வடமாகாண சபை அமைச்சர் என்ற வகையில் என்னைச் சந்திக்க தினமும் வரும் நூற்றுக்கணக்கானவரில் 75 வீதமானோர் வேலை தேடியே வருகின்றார்கள். அவர்கள் விரக்தியான நிலையில் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட 5,000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி வடக்கில் இருக்கின்றார்கள். ஆகவே, இவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் அவர்களும் ஏனைய மாகாணங்களுக்கு போட்டியாக பொருளாதார ரீதியாக தம்மை வளர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே, அதற்கான வழிவகைகளை இந்த அமைச்சு எற்படுத்திக் கொடுத்து வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் பொருளாதார விருத்தியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மத்தி, மாகாணம் என்ற வேறுபாடு இன்றி நாமும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

N5