வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரம் : தமிழரும் , முஸ்லிம்களும் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும்
வடக்கு கிழக்கு இணைப்பு பிரச்சினைக்கு தமிழரும் , முஸ்லிம்களும் பேசியே தீர்வுக்கு வரவேண்டுமென தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அந்த தீர்வில் சிங்களவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் அமரர் க.கணேசலிங்கத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு விடயமானது பிரச்சினைக்குறிய ஒன்றாகவே உள்ளது. எம்மைப் பொருத்தவரை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருமித்து பேசியே அதற்கு தீர்வை காண வேண்டும். முஸ்லிம்களை ஏமாற்றி தமிழ் மக்கள் வட கிழக்கில் எதனையும் அடைய முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றி முஸ்லிம் மக்களும் வடகிழக்கில் எதனையும் அடைய முடியாது. ஆகவே இருதரப்பும் ஒருமித்து பேசி பிணக்கு இன்றி தீர்த்து சிங்கள மக்களுக்கும் சம உரிமை கொடுத்து அவர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் இன்றி தீர்வுகளை காண வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




