செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து விசேட கவனம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை  துறைமுகத்தையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலத்திரனியல் விசா முறைமை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் விமான நிலைய அபிவிருத்தி பிரதானவையாகும். ஆகவே  ஜப்பானின் ஜய்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கட்டுநாயக்க விமான  நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கப்படும்.தற்போது சுற்றுலா பயணிகளின் வருகையை  கருத்திற் கொண்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை  துறைமுகத்தையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்குரிய அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் புதிய திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு முதல் அபிவிருத்தி திட்டங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்றார்.