வடக்கு – கிழக்கு முழு அடைப்பு: அடுத்தது என்ன…?
-நரேன்-
தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், தமது காணிகளில் குடியேறுவதற்கான உரிமைகளுக்காகவும், வேலைவாய்ப்பு கோரி பட்டதாரி இளைஞர், யுவதிகளினாலும் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக போராட்டங்கள் மூன்றாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவின் பிலக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியின் பரவிப்பாஞ்சான் ஆகிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதே தவிர, ஏனைய கோரிக்கைகள் இன்றுவரை முடிவுகள் இன்றியே தொடர்கின்றது. தொடர் போராட்டங்களால் போராட்ட களத்தில் உள்ளவர்களும், அவர்களது குடும்பத்தினர், பிள்ளைகள் எனப் பலரும் அரசாங்கத்தின் மீதும், தமது தலைமைகள் மீதும் வெறுப்படைந்து உள்ளனர்.
இந்தநிலையில், கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் விடுவிக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஒரு பகுதியில் தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கின் முழு அடைப்பிற்கு வித்திட்டது. இது குறித்து அமைச்சரைவயின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கான ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த முழு அடைப்பினால் அரசாங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தேவையேற்பட்டால் இன்னுமொரு முழுஅடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கூற்றில் இருந்து அரசாங்கம் பிரச்சனைகளை இன்னும் தீர்ப்பதற்கு தயாரில்லை என்பது தெரிகிறது. அதேநேரத்தில் தமிழ் தலைமைகள் அரசாங்கத்தை மக்கள் பால் திருப்புவதற்கு போதிய அழுத்தம் வழங்கவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இதுதவிர, அமைச்சரின் கூற்றில் இருந்து அழுத்தம் இருந்தால் தான் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிகிறது. அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து தீர்வளிக்க வேண்டிய கடப்பாடு உடையது. அந்தக் கடமையில் இருந்து தவறும் போது அதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பாதிக்கப்பட்ட சமூகத்தின் தலைமைக்குரியது. இந்த இரண்டுமே நடைபெறுவதாக தெரியவில்லை.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தொடங்கப்பட்ட போராட்டங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கண்டு கொள்ளாத நிலையினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் மீதும் எதிர்ப்பலையை கிளப்பியிருந்தது. நேரடியாக மக்களின் போராட்டங்களில் இணைந்து கொள்ள முடியாத அல்லது இணைந்து கொள்ள விரும்பாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆகியோர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தனர். இந்த ஆதரவை நோக்குகின்ற போது தங்களது குற்ற உணர்வை மறைப்பதற்காகவே வழங்கப்பட்டதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுதியுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு எழுக தமிழ் பேரணியும், மக்களது ஜனநாயக ரீதியான போராட்டங்களும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற நெருக்கடியானது மஹிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்து விடும் என்றும் கருத்து தெரிவித்து அத்தகைய செயலை தவிர்க்குமாறும் தமிழரசுக் கட்சியின் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பேரவையின் பேரணிகள் முடிவுற்றதன் பின்னர் மக்கள் தாங்களாகவே இறங்கி தங்களது பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போதும், தொடக்கத்தில் அதே நிலைப்பாட்டில் இருந்த தமிழரசுக் கட்சியும் அதன் தலைவரும் இரண்டு மாதங்களுக்கு பின்னர் அந்த போராட்டங்கள் நியாயமானவை என்ற முடிவுக்கு வந்திருந்தனர். மக்களை வழிநடத்தி ஒரு ஜனநாயக போராட்டத்தின் ஊடாகவும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அரசிற்கும், சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தலைவர்கள் மக்களின் போராட்டங்கள் நியாயமானவையா அல்லது நியாயமற்றவையா என்று விவாதம் நடத்த வேண்டிய நிலைக்கு தரம்தாழ்ந்திருந்தனர்.
மக்களின் விடா முயற்சியானது இந்த தலைவர்களின் தலைமையையும், தகமையையும் கேள்விக்குள்ளாக்கியது. இதன் விளைவு தான் 27 ஆம் திகதிக்கு நடைபெற்ற முழு அடைப்பிற்கு யார் அழைப்பு விடுத்தது என்பது கூட தெரியாமல் கூட்டமைப்பின் தலைவர், தமிழரசுக் கட்சியின் தலைவர், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆகியோரும் இஸ்லாமிய அரசியற் கட்சிகளும் சேர்ந்து ஆதரவளிக்க முன்வந்தனர். இந்த முழு அடைப்பு போராட்டத்தை பார்க்கின்ற போது எந்தக் கொள்கை அடிப்படையில் எந்த அமைப்பின் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்ட்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
இருப்பினும் இந்தப் போராட்டமானது தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்காக உறுதியுடனும் ஒற்றுமையுடனும் இருக்கின்றார்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு வழங்கியும் உள்ளது.
மக்களை வழிநடத்தி அவர்களை அவர்களது இலக்கு நோக்கியும், நிரந்தர தீர்வு நோக்கியும் வழிநடத்த வேண்டிய தலைமைகள் இன்று அதனை விடுத்து மக்கள் தமது உரிமைக்காகவும், தமது வாழ்விற்காகவும், நீதி வேண்டியும் தாமாகவே மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களின் பின்னால் செல்ல வைத்திருக்கின்றது. ஜனநாயக போராட்ட களத்தில் உள்ள மக்கள் அறிவித்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தலைமைகள் ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இந்த இடத்தில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான தமிழர் அரசியலில் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து அவர்களை ஒரு சக்தியாக வழிநடத்தக் கூடிய ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலை தொடர்வதனையே இது வெளிப்படுத்தியிருக்கிறது.
ஒருபுறம் வடக்கு, கிழக்கில் அனைத்து அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்கின்ற அதேநேரத்தில் மறுபுறத்தில் நன்கு திட்டமிடப்படாத சரியான பின்னனியும், ஒரு பொறுப்பற்ற செயலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தலைமை கொடுப்பது என்பது ஒரு அவசரத்தில் எடுக்கும் முடிவல்ல. மாறாக மக்களின் தேவைகளையும், அவர்கள் படுகின்ற துன்பங்களையும், அதற்கு நிவாரணம் வழங்கக் கூடிய வகையிலும் சிந்தித்து ஒரு கொள்கையை வகுத்து அந்த கொள்கைக்கு ஆதவைத் திரட்டி அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி அதனை வெற்றி பெறச் செய்வதற்கான நோக்கத்துடன் பொருத்தமான போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ள தலைவர்களின் நிலையைப் பார்க்கின்ற போது இப்படி சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாக தெரியவில்லை. காரணம் ஒரு நாள் முழு அடைப்புடன் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை. மக்கள் மீண்டும் தமது பழைய நிலைகளில் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அதிலிருந்து விடுவித்து இதனை மக்கள் போராட்டமாக மாற்றுவதற்கும், தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கும் எத்தகைய திட்டங்களை வைத்துள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே முழு அடைப்பு போராட்டம் என்ற உயர்நிலைக்கு சென்றுள்ள அனைத்து அமைப்புக்களும் அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வருவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக எதைச் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
கொட்டும் மழையிலும், கடும் பனியிலும், உச்ச வெய்யிலிலும், தகரக் கொட்டிலின் கீழ் வாகனப் புகைகளையும், வீதிப் புழுதிகளையும், வீதிச் சத்தங்களையும் தாங்கிக் கொண்டபடி இரவு பகலாக போராடி வரும் மக்களிடம், அவர்களை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு இதனை மக்கள் மயப்படுத்துவதற்கும், போராட்டத்தை முன்னரைவிட எழுச்சியுடன் கையில் எடுத்து செயற்படுத்துவதற்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் முன்வருவார்களா..?
N5
