வடக்கு மக்களுக்கான காணித் தெரிவை வௌ்ளிக்கிழமைக்குள் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு
வடக்கில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்காக காணிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்குள் நிறைவு செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது குறித்த விஷேட சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, இராணுவம், கடற்படை, விமானப்படைத் தளபதிகள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
27 ஆண்டுகளாக தமது காணிகளை மீளப் பெறுவதற்காக எதிர்பார்த்திருக்கும், தமிழர்களுக்கு அவர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஜப்பான் சென்றிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அத்துடன், வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்துவதாக, கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார்.
அண்மையில் காங்கேசன்துறையில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள் சிலவற்றை விடுவிக்கும் நிகழ்வில், தனது வாக்குறுதியை நினைவுபடுத்தியிருந்த அவர், வரும் ஜூன் மாதம்,தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார்.
n10




