செய்திகள்

வடக்கு முதல்வரை கட்டுப்படுத்தும் காய் நகர்த்தல்கள் வெற்றி பெறுமா?

– நரேன் –

2009 மே மாதம் 18 ஆம் திகதி முள்ளியவாய்க்கால் பேரவலத்துடன் தமிழின விடுதலைக்கான ஆயுத வழிப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. அதன்பின்னர் தமிழர் தரப்பு தமது நியாய தீர்வுக்காகவும் இழந்த இழப்புக்களுக்கு நீதி வேண்டியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பேயே நம்பி இருந்தனர். அதற்காக 2010  ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிக வாக்குகளையும் வடக்கு, கிழக்கில் வழங்கியிருந்தனர். இந்நிலையில் அடக்கு முறை அரசாங்கத்தின் காலப்பகுதியில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரிக்கப்பட்ட வடமாகாண சபைக்கான தேர்தல் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. மாகாண சபையை கைப்பற்றி விடலாம் என பல முனைகளிலும் முயன்ற மஹிந்தா அரசாங்கத்திற்கு அதிர்ச்சியே மிஞ்சியிருந்தது. வடக்கு மாகாண சபையில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 30 உறுப்பினர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்டனர். இதனை அப்போது ஊடகங்கள் சிலவும் ‘மலர்ந்தது தமிழர் அரசு’ எனவும் புகழ்ந்து தள்ளியிருந்தன.

இந்நிலையில், 60 வருட காலம் உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனம் இன்று தமது உரிமையை வலியுறுத்தி கேட்க முடியாத நிலையில் உள்ளது. ஆனாலும் வடமாகாண சபையே இன்று தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அல்லது அழுத்தம் கொடுக்கும் அமைப்பாக இருந்து வருவதனை எல்லோராலும் உணர முடிகிறது. 2009 முள்ளியவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழர் தரப்பு நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இணக்க yஅரசியலுக்குள் மெல்ல மெல்ல சென்று இன்று அரசின் ஒரு பங்காளிகளாகவே மாறிவிட்டனர். யாழ்ப்டபாணத்தில் மேதினத்தில் சிங்கக் கொடி ஏந்தி கூட்மைப்பின் இணக்க அரசியலை ஆரம்பித்த கூட்டமைப்பின் தலைவர் இன்று படிமுறையாக வளர்ந்து இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு பாராளுமன்றத்தில் உயர் பதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். பதவிக்கு விசுவமாக அண்மையில் குறைநிரப்பு பிரரேணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது அரசை காப்பாற்றியும் இருந்தனர். இவை ஒரு புறமிருக்க இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளியவாய்கால் நினைவு தினம் 7வது முறையாக நடைபெற்றும் அதில் கலந்து கொள்ளாத தொடர்ந்தும் தவிர்த்து வருக்கின்றனர். இது தான் அவர்களின் இராஜதந்திரமா என எண்ணத் தோன்றுகின்றது. கூட்டமைப்பில் இருவர் 7 வருடமாக புறக்கணிக்க இம்முறை பாராளுமன்றத்தில் பெற்ற பதவிக்காக விசுவாசம் காட்டி பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரான செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் முள்ளியவாய்கால் நினைவேந்தலை புறக்கணித்துள்ளார். இவ்வாறு தான் இன்றைய அரசியல் நிலமை நகருகிறது. கூட்டமைப்பின் தலைமை இணக்க அரசியலுக்குள் தமது சொந்த மக்களை நினைவு கூர கூட முடியாதவர்களாக செல்ல மக்கள் மனம் அறிந்த சபையாக வடமாகாண சபையே இருந்து வருகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் தமிழர் தரப்புக்கு நம்ப்க்கையூட்டும் ஒரு அமைப்பாக வடமாகண சபையே இருந்து வருகிறது. அதன் மேல் சிலர் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தாலும் வடமாகாண சபை தமிழர் தரப்பின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதை யாரும் மறுத்துவிட முடியாது. கூட்டமைப்பின் தலைமை செய்யாததை வடமாகாண சபை செய்து வருகின்றது. அதற்கு காணரணம் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே. முன்னாள் நீதியரசராகவும் விலைபோகாத தலைவராகவும் தற்போது தமிழர் தரப்பில் வலம் வருபவர் இவர். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என கூட்டமைப்பின் தலைமை கூற தயங்கிய நிலையில் இனப்படுகொலை தான் நடந்தது என வடக்கு மாகாண சபை மூலம் முதலமைச்சர் வெளிப்படுத்தி அது பற்றி விபரித்தும் இருந்தார்.

3வடக்கின் நில அபகரிப்பு, இராணுவ மயமாக்கல், பௌத்தமயமாக்கல் என பல அரச திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு வடமாகாண சபை அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. சர்வதேச ரீதியில் வருகின்ற இராஜதந்திரிகளுடன் வடக்கு முதல்வர் தமிழர் தரப்பு கருத்துக்களை நியாயமான முறையில் முன்வைத்தும் வருகின்றார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமை ளெனமாக இருக்கும் நிலையில் வடமாகாண சபை சமஸ்டித் தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. இவ்வாறாக தமிழர் தரப்பு கருத்துக்கள் வடமாகாண சபை மூலமே வெளிப்படுத்தப்படுகின்றது. இதனால் வடமாகாண சபையை செயலிழக்க செய்ய வேண்டிய அல்லது கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கவே செய்கின்றது. அரசின் காய்நகர்த்தல்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபை அச்சுறுத்தலாகவே இருந்தும் வருகிறது. இதனால் மாகாணசபையை குழப்புவதற்கு திட்டமிட்ட சில செயற்பாடுகளை அரசு மேற்பெகாண்டு வருகிறதா என்ற எண்ணம் கூட இங்கு எழாமல் இல்லை.

வடமாகாண சபையை குழப்பும் செயற்பாடுகளும், வடமாகாண சபை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளும் திரை மறைவிலும் வெளிப்படையாகவும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. இதனை மக்களும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமும் கூட. வடமாகாண சபைக்கு எதிராக மத்திய அரசாங்கம் திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு ஊடாக செயற்பட்டு வரும் அதேவேனை, வடமாகாண சபைக்குள் உள்ள சில உறுப்பினர்கள் ஊடாகவும் அதனை செய்ய முனைகிறது. வடமாகாணசபைக்குள் இடம்பெறும் குத்துவெட்டுக்களும் குழப்பங்களும் அதனை வெளிப்படுத்தியும் நிற்கின்றன. புதிய அரசாங்கம் வந்த பின்னர் 65,000 பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கில் அமைக்க மத்திய மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சு தீர்மானித்திருந்தது.

யாழில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை கையளிக்கும் நிகழ்வில் குறித்த வீடு எமது பகுதிக்கு பொருத்தமற்றது என வடமாகாண முதலமைச்சர் வெளிப்படையாக கூறியிருந்தார். மத்திய அமைச்சர் சுவாமிநாதன் அதனை மறுத்திருந்தார். அதேமேடையில் உரையாறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை சமசரம் செய்யும் வகையில் உரையாற்றியிருந்தார். இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பில் கலந்து பேசி தீர்வு காண்பதற்கு முன்னரே வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு மத்திய அரசினால் பத்திரிகை மூலம் அறிவுறுத்தல்கள் விடப்பட்டு விண்ணப்பங்களும் கோரப்பட்டிருந்தது. மீள்குடியேறி வீட்டுத்திட்டம் இல்லாது மழையிலும், வெயிலிலும் போராடிய 80,000 பேர் வரையில் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் வீடு தேவை என விண்ணபித்த நிலையில் மத்திய அரசு தற்போது 80,000 பேர் விண்ணப்பித்துள்ளதால் மக்கள் பொருத்து வீடுகளை விரும்புகிறார்கள் முதலமைச்சர் தான் குழப்புகிறார் என்ற தோரணையை காட்ட முயல்கிறது. இது மாகாண சபைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு செயற்பாடே.

இரண்டாவது, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியாவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க இடம்கோரப்பட்டிருந்தது. வடமாகாணசபை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஓமந்தையில் இடம் வழங்கிய போதும் அதனை மறுத்து மத்திய அமைச்சு மாகாண சபையின் பூரண விருப்பத்திற்கு மாறாக அதனை தாண்டிக்குளத்தில் அமைக்க அனுமதியை பெற்றுள்ளது. இதற்கு நகரில் இருந்து 3 கிலோமீற்றருக்குள் பொருளாதார மத்திய நிலையம் இருக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் கூறுகின்ற போதும் அது நியாயமான காரணம் என கூற முடியாது. மாறாக மாகாண சபை மீதும் கூட்மைப்பு மீதும் மக்களை அதிருப்தி கொள்ளச் செய்யும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

இறுதியாக முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் மாகாண சபை இது தொடர்பாக ஆராய்ந்தும் வருகிறது. இந்நிலையில் அண்மையில் கிளிநொச்சி சென்ற அமைச்சர் ரவூக் ஹக்கீம் இரணைமடு நீரினை யாழ் கொண்டு செல்வேன் என கூறியுன்ளார். இந்த விவகாரம் கூட அடுத்து வரும் மாதங்களில் சூடு பிடிக்கவுள்ளது. இதிலும் மகாண சபைக்குள் குழப்பங்கள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.

இவ்வாறாக அபிவிருத்தி என்ற போர்வையில் மத்திய அரசாங்கம் மக்களை இலக்கு வைத்து, அபிவிருத்திக்கு மாகாண சபை தடையாக இருப்பதாக காட்டி மாகாணசபைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்க முனைகிறதா..?

60 வருடம் உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சலுகை அரசியலை விரும்பவில்லை என்பது வெளிபடையே. அதற்காகவே சலுகைக்காக அரசுடன் நின்றவர்கள் மக்களால் புறக்கணிப்பட்டும் இருந்தார்கள். இது தான் திட்டம் இதனை நடைமுறைப்படுத்தா விட்டால் அந்த பணம் திரும்பிச் சென்று விடும். அபிவிருத்தியை மாகாணசபை குழப்புகிறது என்ற ஒரு மாயையை மத்திய அரசாங்கம் ஏற்படுத்த முனைகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது. பணம் திரும்பிச் சென்று விடும் என்பதற்காக அரசிற்கு வால் பிடித்துக் கொண்டு இருக்க முடியாது.

அவ்வாறு தான் செய்வதாக இருந்தால் நாம் முள்ளியவாய்கால் வரை சென்றிருக்கவும் தேவையில்லை.  அபிவிருத்தி என்பது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதும் அவசியமானதும் கூட. ஆனால், அதனை திணிக்க முற்படக் கூடாது. வடக்கு மக்களின் ஆதரவுடன் வடக்கு மாகாண சபை இருக்கின்ற போது அதனை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் சரியானவையா..?

இவ்வாறு மத்திய அரசாங்கம் வடமாகாண சபையை ஓரங்கட்டும் சில வேளைகளை செய்து வரும் நிலையில் மாகாணசபைக்குள்ளும் அரசுக்கு வலுச் சேர்க்கும் வகையில் சில குழப்பங்கள் இடம்பெற்றே வருகின்றது. மாகாண சபைக்குள் உள்ள ஒரு அணி முதலமைச்சர் மீது தனிப்பட்ட சில கருத்துக்களை கூறி அங்கு எடுக்கும் தீர்மானங்கள், திட்ட வரைபுகளை குழப்பும் செயற்பாடுகளில் கச்சிதமாக ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கூட வடமாகாண சபையால் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு நோக்கி தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைபை குழப்புவதற்கு கூட முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.

அதற்கு வேறு வேறு காரணங்களை குழப்புபவர்கள் கூறினாலும் அது சரியானது தானா என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறாக, மாகாண சபைக்குள் கூட வடக்கு முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இது ஒருபுறமிருக்க, மாகாண சபையின் அமைச்சுக்களை மாற்றுமாறு கூட ஒரு தரப்பு கோரிக்கை விட்டுள்ளது. அது தொடர்டபாக ஆலோசித்து வருவதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படையாக தெரிவித்து வரும் வடக்கு முதல்வரை கட்டுப்படுத்த பல முனை நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய அரசியல் சூழலில் முதல்வர் மீது அழுத்தம் கொடுக்க அல்லது அவரை கட்டுப்படுத்த முனைவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் நிலைக்கே கொண்டு சென்று விடும் என்பதே உண்மை.