வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகளை இந்தியா ஆரம்பித்தது
இலங்கையில் வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகளை நன்கொடை உதவியின் கீழ் இந்தியா ஆரம்பித்தது
5 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நன்கொடையின் கீழ் முன்னெடுக்கப்படும் இலங்கையின் வடக்கு ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோரால் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரத்ன, வட மேல் மாகாண ஆளுநர் கௌரவ திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கீதா ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் கௌரவ டாக்டர் சு ஜெய்ஷங்கர் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்நிர்மாண மற்றும் புனர்வாழ்வு இந்திய உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவே இச்செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டிருந்த சேதங்களின் விஸ்தீரணம், குறிப்பாக பயணிகளின் போக்குவரத்து தேவைகளுக்கு முக்கியமான அம்சங்களான ரயில்வே போன்ற முக்கிய போக்குவரத்து மார்க்கங்கள், அத்தியாவசிய சேவைகள், மற்றும் ஏனைய ஏற்பாட்டியல் கட்டமைப்புகளின் அவசர மீள்நிர்மாணத்துக்கான அவசியத்தினை ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் ஏற்கனவே இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வடக்கு ரயில் மார்க்கத்தின் மீள்நிர்மாணத்துக்காக இந்திய அரசாங்கம் நன்கொடை உதவியினை வழங்கியுள்ளது.
இந்த மீளமைப்பு பணிகள் ரயில்வே மற்றும் புனரமைப்பு பணிகளில் அதிக அனுபவத்தைக் கொண்ட இந்திய பொதுத்துறை நிறுவனமான IRCON சர்வதேச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் கீழ் வடக்கு ரயில் மார்க்கத்தின் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதும் வடக்கு மற்றும் வட மேல் மாகாணங்களில் ரயில் சேவைகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுமான மாஹோ – ஓமந்தை, ஓமந்தை – யாழ்ப்பாணம் மற்றும் மதவாச்சி – மன்னார் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கி இப்புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த உதவிப் பொதி குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டு மூன்றுவார காலத்துக்குள் இந்த திட்டத்தினை நேற்று (11) ஆரம்பித்துள்ளமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றப்படவேண்டுமென்ற நோக்குடன் இந்தியா வழங்கிய முன்னுரிமையை பிரதிபலிக்கின்றது. புனரமைப்பு பணிகள் 2026 மே இல் நிறைவடைய வேண்டுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் மூன்றுமாத காலப்பகுதிக்குள் வேலைத்திட்டங்களை நிறைவேற்றி தமிழ் சிங்கள புதுவருட காலத்தில் குறித்த ரயில் சேவைகளை, டித்வா புயலுக்கு முன்னர் காணப்பட்ட வகையில் அவற்றை செயல்படுத்தும் இலக்குடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த கால எல்லை இலக்கு குறுகியதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரிய அளவிலான மனிதவளம் மற்றும் விசேட இயந்திரங்கள் அப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும். IRCON சர்வதேச வரையறுக்கப்பட்ட நிறுவனம் மாஹோ–ஓமந்தை ரயில் பாதையில் நிலுவையில் உள்ள பணிகளையும் நிறைவு செய்வதனை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக இந்தியா நடைமுறையில் உள்ள கடனுதவி திட்டத்தினை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தில் ரயில்வே தொடர்ந்தும் முக்கிய பகுதியாக காணப்படுகின்றது. இதுவரை இந்தியாவால் இலங்கையின் ரயில்வே துறைக்காக வழங்கப்பட்ட நிதி உதவி அண்ணளவாக 1.2 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. 500 கிலோமீட்டர் ரயில் பாதை நிர்மாணம் மற்றும் புனரமைப்பு, 400 கிலோமீட்டர் ரயில் பாதையின் சமிக்கை தொகுதி பொருத்துதல், ரயில் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் விநியோகம், ஆகியவை இதில் உள்ளடங்கி காணப்படும் அதேவேளை இதன் மூலமாக இலங்கையின் ரயில்வே செயற்பாடுகள் வலுவாக்கப்படுவதுடன் தடையற்ற ரயில் இணைப்புகளும் மேம்படுத்தப்படுகின்றன.




