வடமாகாண சபையின் தீர்வு யோசனை 30 ஆம் திகதி சம்பந்தனிடம்: யாழில் விஷேட நிகழ்வு
வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராஜா ஆகியோர் அரசியல் தீர்வு யோசனையை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும்.
கடந்த 16 ஆம் திகதி வடமாகாண சபையின் தீர்வுத் திட்டம் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படவிருந்தது. எனினும் தீர்வுத் திட்டம் சபையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 30 ஆம் திகதி இது கையளிக்கப்படவுள்ளதாக சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை தலைவர் சம்பந்தனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் மே 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதமர், சபாநாயகர், ஜனாதிபதி, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் சபைத் தரப்பினர் தெரிவித்தனர்.
R-06




