வட மாகாண கல்வி அமைச்சரின் பதிலால் அதிர்ந்த மாணவர்களின் பெற்றோர்
வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அதிபர் இடமாற்றத்தை எதிர்த்து பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், நியாயம் கேட்கச் சென்ற பெற்றோரிடம் வடமாகாண கல்வி அமைச்சர் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், குற்றஞ்சாட்டியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தும்போது விபத்து நடந்து அவர்கள் காயமடைந்தால் அல்லது உயிரிழந்தால் அது உங்கள் பிரச்சினை, எங்கள் பிரச்சினை இல்லை என வடக்கு கல்வியமைச்சர் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் அவர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வடமாகாணத்தில் அதிபர் சேவை தரம் 01 க்கு தகுதி பெற்ற அதிபர்களை மத்திய கல்வி அமைச்சின் உத்தரவுக்கு அமைய மாகாண கல்வியமைச்சு நியமித்து வருகின்றது. இந்நிலையில் பல பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்கள் பாடசாலைகளின் அதிபர்களை இடமாற்றம் செய்யவேண்டாம் எனவும், பாடசாலைகளில் அதிபர்கள் பலர் மாணவர்களுக்கான கற்பித்தல் மற்றும் பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிக்கொண்டிருக்கும் நிலையில் உடனடி இடமாற்றத்தை வழங்காமல் க.பொ.த. உயர்தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் பொருத்தமான அதிபர்களை நியமிக்குமாறும் கேட்டுவருகின்றனர்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் கடந்த சில தினங்களாக புதிய அதிபர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புதிதாக நியமிக்கப்படும் அதிபர் தங்கள் பாடசாலையில் இருந்து சிக்கல்களை உருவாக்கி பல குழப்பங்களுக்கு காரணமானவர் எனவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இது தொடர்பாக கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவை அவருடைய அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றதாகப் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்திப்புக்குச் சென்றிருந்த பெற்றோரில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் கூறிய அனைத்து விடயங்களையும் அவர் ஒத்துக்கொண்டார். ஆனால் பின்னர் பாடசாலை மாணவர்கள் வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் அப்படி நிற்கையில் வாகனங்களினால் விபத்துகள் நடந்து காயங்கள், உயிரிழப்புகள் வந்தால், அதற்கு என்ன செய்வது? என நாங்கள் கேட்டபோது, அது உங்கள் பிள்ளைகள்தானே, அது உங்கள் பிரச்சினை, எங்கள் பிரச்சினை இல்லையே என்ற பதிலை வழங்கினார். ஒரு கல்வி அமைச்சர் என இருப்பவர் இப்படிப் பேசலாமா? இதற்காகத்தான் இவரை கல்வியமைச்சராக நியமித்தார்களா? மக்களுக்காக சாதாரண பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய முடியாத நிலையில், இவர்கள் எப்படி எங்கள் மற்றைய பிரச்சினைகளை தீர்ப்பார்கள்? எனவே இவர்கள் எவரும் தேர்தலுக்காக எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என அந்தப் பெற்றோர் கோபத்துடன் கூறியுள்ளனர்.




