வட மாகாண சபையின் யோசனை: அதிகரிக்கும் எதிர்ப்பின் பின்னணி என்ன?
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி ஆட்சிமுறையை உள்ளடக்கியதான, அரசியலமைப்புத் திருத்த யோசனையை வடக்கு மாகாணசபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. வடக்கு மாகாணசபையின், 19 பேர் கொண்டு குழுவினால் தயாரிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட, தீர்வு யோசனையின் இறுதிவடிவத்தை கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாணசபையின் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்திருந்தார்.
காலை தொடக்கம் பிற்பகல் வரை நடந்த விவாதங்களின் பின்னர், இந்த வரைவுக்கு வடக்கு மாகாணசபை அங்கீகாரம் அளித்தது. தென்பகுதியில் பெரும் வாதப் பிரதிவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ள இந்த திருத்த யோசனை மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வரும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தம் அமைய வேண்டும் என்று இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு, எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசாங்கத்துடன் ஒரு இணக்க அரசியலைக் கடைப்பிடிக்க முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரையில் இந்த யோசனைகள் சங்கடமான நிலைமையைக் கொடுப்பதாக அமையலாம். அரசாங்கத்தைச் சங்கடத்துக்குள்ளாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கூட்டமைப்பின் தலைமை இதற்கு எவ்வாறான பிரதிபலிப்பை வெளிப்படுத்தப்போகின்றது என்ற கேள்வியும் உள்ளது. தமது மென்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படுத்துவதாக இருக்கும்.
வடமாகாண சபையின் தீர்மானம் வெளிவந்த நிலையில் தென்பகுதியில் சிங்களக் கடும்போக்காளர் மத்தியில் அது பெரும் உணர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. விக்னேஸ்வரன் தனிநாட்டைக் கோருகின்றார் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு சிங்கள – பௌத்த தேசியவாதிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் துடிக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான குழுவினர் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதைக் காணமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும், விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் அவர்கள் கைகளில் எடுத்துள்ளார்கள். இதனைவிட எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது, அதற்கு இனவாத சாயம் போடப்படுவதும், தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முற்படுகின்றார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் வழமையாகிவிட்டது. தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போதே அவ்வாறான கருத்துத்தான் தென்பகுதியில் முன்வைக்கப்பட்டது. சமஷ்டி என்பது தனிநாட்டுக்கான கோரிக்கை எனச் சித்தரிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை பிரிவினைவாதமாகக் காட்டிக்கொள்வதன் மூலம், அடிப்படை உரிமைகளை வழங்குவதற்குக்கூட இனவாத சக்திகள் தடை போட்டன. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக அப்படியே சென்றுவிட்டது. இப்போதாவது, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சற்று அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு சிங்களத் தேசியவாதிகள் முன்வருவார்களா?
வடமாகாண சபையின் யோசனைகளைச் சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட, இதனைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார். “நாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும்” என்று தன்னுடைய உரையில் அவர் தெரிவித்திருக்கின்றார். “நாடு சுதந்திரம் அடைந்தபோது நாம் எமது இறையாண்மையைத் தனித்துவமாகக் கோராமல் மற்றைய மக்களுடன் கூட்டமாகச் சேர்ந்து இலங்கை மக்களுக்கான இறையாண்மை என்ற கோரிக்கையினுள் அமிழ்த்திவிட்டோம். ஆகவே,அது பற்றிப் பேசாமல் சர்வதேச ஒப்பந்தங்களில் காணுமாறு மக்கட் குழாம் தனது தனித்துவத்தைப் பேண எந்தவாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியே இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளோம். கூடியவாறு முரண்பாடுகளையும் தீவிரப் போக்குகளையும் கட்டுப்படுத்தியுள்ளோம்” எனவும் முதலமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரிப்பதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வடமாகாண சபையால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த யோசனை முக்கியமானதாகும். புதிய அரசியலமைப்பைப் பொறுத்தவரையில் மூன்று விடயங்கள் அதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டிருக்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது. 1. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுதல். 2. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு. 3. தேர்தல் முறையில் மாற்றம். பிரதமரால் கொண்டுவரப்பட்ட யோசனையில் முகவுரையில் காணப்பட்ட இந்த மூன்று விடயங்களும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டன. சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் அவை நீக்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், இந்த மூன்று விடயங்களையும் இலக்காகக்கொண்டதாகத்தான் அரசியலமைப்புத் திருத்தம் அமைய வேண்டும்.
சிங்களக் கடும்போக்காளர்களைப் பொறுத்தவரையில் இனநெருக்கடிக்கான தீர்வையும் உள்ளடக்குவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அந்தத் தரப்பினரைத் திருப்திப்படுத்தும் வகையில்தான் முகவுரை நீக்கப்பட்டது. பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் புரிந்துகொண்டு அறிவுபூர்வமாக அணுகுவதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும். பிரச்சினையே இல்லை என கண்களை மூடிக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாகாது. வடமாகாண சபை பிரிவினையைக் கோரவில்லை. முதலமைச்சர் அதனைத் தெளிவாகக்கூறியிருக்கின்றார். “நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே எமது வரைவை நாம் யார்த்திருக்கின்றோம். நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும் இசைவையும் நல்க வேண்டும்” என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருக்கின்றார்.
அதிகாரப் பரவலாக்கல் என்பது பிரிவினைக்கான பாதையல்ல என்பதையும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதற்கான வழி அதுதான் என்பதையும் தேசியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். அதிகளவிலான அதிகாரப்பரவலாக்கியுள்ள மேற்கு நாடுகள் இதற்கு உதாரணம். மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கிய இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இந்திய தேசியத்துக்குள் வாழ்வதையே அந்த மாநிலங்கள் விரும்புகின்றன. அதேபோன்ற ஒரு நிலையை இலங்கையில் ஏன் ஏற்படுத்த முடியாது?
(ஞாயிறு தினக்குரல்)




