வட மாகாண சபை கனடா மார்க்கம் நகர சபையுடன் பொங்கல் தினத்தன்று ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை: முதலமைச்சர் கனடா சென்றார்
எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினம் அன்று வட மாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ‘ இரட்டை நகர்’ உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. இதன்பொருட்டு வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் அமைச்சர்கள், அதிகாரிகள் கனடா சென்றுள்ளனர். முதல்முறையாக கனடாவில் சகல தமிழ் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்வுக்கு ஆதரவை வழங்கி உள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் லண்டனில் கிங்ஸ்ரன் நகர சபையுடன் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ள நிலையில் வட மாகாண சபை கைச்சாத்திடும் இரண்டாவது ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை இதுவாகும். ஏற்கனவே கிங்ஸ்ரன் நகர சபையுடன் செய்துகொண்ட இரட்டை நகர் உடன்படிக்கையின் ஊடாக பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தி செயற்த்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இந்த உடன்படிக்கை மூலம் தாயகத்தில் பல செயற்த்திட்டங்களை முன்னெடுக்க ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதேபோன்று ஐரோப்பிய நாடுகளிலும்’ இரட்டை நகர்’ உடன்படிக்கைகளை மேற்கொண்டு புலம்பெயர் தமிழ்மக்களின் முதலீடுகள் மற்றும் உதவிகளை வட மாகாணத்துக்கு கொண்டுவரும் ஏற்பாடுகளையும் வட மாகாண சபை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை, 14 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமான அளவில் பொங்கல் விழா ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொங்கல் விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொள்கிறார்.
இந்த ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று கடந்த திங்கட்கிழமை மார்க்கம் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தோரும் தமிழ் மரபியல் மைய உறுப்பினர்களும் ஏற்பாட்டுக் குழுவினரும் அங்கு குழுமியிருந்தனர்.
மார்க்கம் பொங்கல் விழா பற்றிய விளக்கங்களை திரு லோகன் கணபதி கூறினார். மரபுகள், பண்பாட்டுத் தொடர்ச்சிகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தைத் தன் உரையின் போது வலியுறுத்திய அவர் 2011ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி தைமாதம் 13ம் 14ம் நாட்கள் தமிழர் மரபுரிமை நாட்களாக, மார்க்கம் மாநகரசபையால் அங்கீகரிக்கப்பட்டமையும் அதன்பின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் பொங்கல் விழா உயர்ந்த பெறுமானத்தை இலக்காகக் கொண்டு நடைபெறுவதையும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் கணையாழி இதழ் தனது தை மாத இதழைக் கனடாச் சிறப்பிதழாக வெளியிடவுள்ளது. இந்த வெளியீட்டில் கணையாழி இதழின் ஆசிரியர் திரு இராசேந்திரனும் கலந்துகொள்கிறார். .
ரொரான்ரோவில் இருக்கும் ஓவியக்கலைஞரான திரு கருணாவின் ஓவியங்களும் பொங்கல் தினம் அன்று காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறது.
இருநாட்களும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் கீழே தரப்படுகின்றன.
தமிழ்விழா
சனிக்கிழமை ஜனவரி 14
காலை 10:00 – ஆடல், சிலம்பம், யோகக் கலைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை
நண்பகல்12:00 – ஓவியக்கலைஞர் கருணாவின் ஓவியக் கண்காட்சி தொடக்கி வைக்கப்படும்.
பிற்பகல் 3:00 – கணையாழி சஞ்சிகை ‘கனடாச் சிறப்பிதழ்’ அறிமுகம்
மாலை 6:00 – வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வடமாகாண முதல்வர் சி.வி.
விக்னேஸ்வரன் மாநகரசபை மேயர் பிராங் ஸ்கார்பிற்றி பங்கேற்கும் இரட்டைநகர உடன்படிக்கை கைசாத்து.
பொங்கல் திருவிழா
சனிக்கிழமை ஜனவரி 15 – பிலேற்றோ மார்க்கம் கலையரங்கம் (குடயவழ ஆயசமாயஅ வுhநயவசந)
பிற்பகல் 2 முதல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
· தமிழர் பண்பாடு, வாழ்வியல் மரபுகளை வெளிபடுத்தும் கலை நிகழ்வுகள்
· மூத்த கலைஞர் மதிப்பளிப்பு
· பொங்கல் விழாமலர் வெளியீடு என்பன முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்கின்றார்.





