செய்திகள்

வத்தளை பாடசாலை தொடர்பில் பிரபா கணேசன் தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறார் : குகவரதன்

வத்தளையில்  தமிழ் பாடசாலை தேவை என்ற சுமார் 20 வருடக்கால வரலாறு கொண்ட கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் நல்ல அறிகுறிகள் தோன்றியுள்ளன. இது தொடர்பில் இறுதி முடிவு 26ம் எடுக்கப்படும். அதன்பின்னர் பாடசாலை கட்டுமான பணிகள் ஆரம்பமாகும். இந்த நல்ல வேளையில், இந்த விவகாரத்தில் எந்தவித அதிகாரமும், தேவையும் இல்லாமல் மூக்கை நுழைத்து எங்கள் தலைவர் மனோ கணேசன் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் பொறுப்பற்ற  செய்கையை முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் செய்து வருகிறார். இதை இவர் உடன்  நிறுத்த வேண்டும்.

இன்று நமது மேல்மாகாணசபையிலும், நமது மத்திய அரசிலும் அதிகாரத்தில் இருக்கும் பலரது பொறுப்புள்ள அமைதியான நடவடிக்கைககள் காரணமாக இந்த பிரச்சினை இப்போது தீர்வை எட்டியுள்ளது. இந்நிலையில் மேல்மாகாணசபை ஆளுநர் கெளரவ. கே.சி. லோகேஸ்வரன் அவர்கள், வத்தளை தமிழ் பாடசாலை நிர்மாணம் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் முகமான கலந்துரையாடலை எதிர்வரும் 26ம் திகதி தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுதான் இந்த விவகாரம் தொடர்பான தற்போதைய அதிகாரப்பூர்வ வளர்ச்சி கட்டமாகும். இது புரியாமல் மக்களை தூண்டி விடுவது ஓர் துரோக செயலாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சண். குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது,

தலைவர் மனோ கணேசனின் வேண்டுக்கோளின் பேரில், கடந்த 30ம் திகதி மேல்மாகாணசபை ஆளுநர் கெளரவ. கே.சி. லோகேஸ்வரன் மேல்மாகாணசபை தமிழ் மொழி மூல பாடசாலைகள் அபிவிருத்தி பற்றிய கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன், இந்த வத்தளை தமிழ் பாடசாலை தொடர்பான விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அழுத்தமாக கோரிக்கை விடுத்தார். அதையடுத்து ஆளுநரும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் மேல்மாகாணசபை கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவும் 13ம் திகதி அடிக்கல் நாட்டப்படும் என்ற முடிவை அறிவித்தனர். அதை மிகவும் மகிழ்ச்சியுடன் தலைவர் மனோ கணேசனும், கூட்டத்தில் கலந்துக்கொண்ட மேல்மாகாணசபை தமிழ் உறுப்பினர்களான நானும், நண்பர் கே. டி. குருசாமியும் ஏற்றுக்கொண்டோம்.

இந்நிலையில், இந்த சுமூக தீர்மானத்தின் மூலம் தலைவர் மனோ கணேசன் பெயர் வாங்கி விடுவாரே என்ற பொறாமை அரசியல் காரணமாக இதை குழப்பிட  சிலர் முயல்கிறார்கள். அந்த நபர்கள் யார் என்பதையும், அவர்களுக்கு பின்னணியில் ஆலோசகராக இருப்பவர் யார் என்பதையும்,  முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசனின் வெளியிட்டு வரும் ஊடக அறிக்கைகள் மூலம் இப்போது வத்தளை வாழ் தமிழ் மக்களுக்கு தெரிய வருகிறது.

கடந்த காலத்தில் கபினட் அமைச்சராக இருந்த அமரர் பி. சந்திரசேகரன் இந்த பாடசாலை காணி தொடர்பாக 2003ம் வருடம் நிதி ஒதுக்கீடு செய்தார்.  அதேபோல் முன்னாள் கபினட்  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் 2013ம் வருடம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த வத்தளை தொகுதியை நீண்ட காலமாக பிரதிநிதித்துவம் செய்து வரும் அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இந்த விடயம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளார். ஆனாலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த பாடசாலை திட்டம் ஆரம்பமாகவில்லை. இதற்கிடையில் இந்த பிரபா கணேசன் 2010ம் வருடம் முதல் 2015ம் ஆண்டுவரை மகிந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சரகவும் இருந்தார். வத்தளை தொகுதி அமைந்துள்ள கம்பஹா மாவட்டத்தின் மகிந்த கட்சி தலைவர் பசில் ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக்கொண்டே பிரபா கணேசன் கட்சிமாறி மகிந்த அரசுடன் இணைந்து கொண்டார். இப்போது இங்கே குதர்க்கம் பேசும் இவரால்,  அப்போது பசில் ராஜபக்சவுடன் பேசி இந்த பாடசாலையை அமைக்க அந்த ஆறு வருடத்தில் ஒருபோதும் முடியவில்லை.  இந்நிலையில் இப்போது இதுபற்றி பேச இவருக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது என எமக்கு விளங்கவில்ல.

நமது தலைவர்  மனோ கணேசன் தற்போது 5 மாதங்களுக்கு முன்தான் தன் வாழ்வில் முதன்முறையாக கபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.  இந்த குறுகிய காலத்திற்குள் அவர் அவசரப்படாமல் நிதானமாக பல்வேறு நல்ல காரியங்களுக்கு அடித்தளம் இட்டு வருகிறார். இதில் இந்த வத்தளை தமிழ் பாடசாலை விவகாரமும் ஒன்று ஆகும். அவர் கொழும்பு மாவட்ட எம்பி மட்டுமல்ல. இந்த நாட்டின் இனங்களுக்கு இடையிலான தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் துறைக்கு பொறுப்பான கபினட் அமைச்சரும் ஆகும். வத்தளையில் தமிழ் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கல்வி கற்க முடியாவிட்டால் அது இன மொழி சகவாழ்வு பிரச்சினை ஆகும். ஆகவே அவரை அவர் போக்கில் செயற்பட விடுங்கள்.  இருபது வருடங்களாக இழுபடும் இந்த விடயத்தை, அவர் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு செய்து முடிப்பார்.

பெரும்பான்மை இனத்தவரையும் இழுத்துக்கொண்டு செயற்படும் சாணக்கியம் எங்கள் தலைவருக்கு தெரியும். அதுபற்றிய பிரபா கணேசனின் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதியும், கம்பஹா மாவட்ட அரசாங்க முன்னணி பிரமுகருமான சந்திரிகா குமாரதுங்க, கபினட் அமைச்சரும், வத்தளை தொகுதி ஐதேக அமைப்பாளருமான ஜோன் அமரதுங்க, அமைச்சரும்,  வத்தளை தொகுதி ஸ்ரீலசுக அமைப்பாளருமான நிமல் லான்சா, மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச ஆகியோர் எங்கள் தலைவரின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

நாம் எல்லோரும் ஒரே தேசிய அரசின் அங்கத்தவர்கள். பிரபா கணேசன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதிநிதித்துவம் செய்பவர். ஆகவே அவருக்கு இங்கு இடமில்லை. அதனால்தான் அவர் கூக்குரலிட்டு இங்கே குழப்பம் விளைவிக்க முயல்கிறார் என்பதை கம்பஹா மாவட்ட தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த பாடசாலைக்கு காணி ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் சில பெரும்பான்மை இனத்தவர்களை பாடசாலை நிர்மாணத்துக்கு எதிராக  தூண்டிவிடவும் இவர் முயல்கிறாரா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. இவருடன் கைகோர்த்து கொண்டு ஆபத்தில் விழ வேண்டாம் என வத்தளையில் உள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகளுக்கு  கூறிவைக்க விரும்புகிறோம்.
R-06