செய்திகள்

வன்புனர்வு குற்றவாளிகளுக்கு சாதகமாகும் பொலிசாரின் பலவீனம்: அசமந்தம்!

-கே.வாசு-

யுத்ததத்திற்கு பின்னர் வடக்கில் சிறுவர், சிறுமிகள் மீதான வன்புனர்வுகுளும், கொலைகளும் அதிகரித்தே வருகிறது. இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா..? என மாணவர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு இந்த நிலை சென்றுள்ளது. அப்படியாயின் இந்த அரசாங்கம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கையிழந்தவர்களாக மாணவர்கள் உள்ளனரா என்ற வினா எழுகின்றது. அப்படியான நிலமைகள் இருப்பதையே நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றது.

kirusanthi1996 ஆம் ஆண்டு யாழ் சுண்டுக்குளி பாடசாலையின் உயர்தர மாணவி கிருசாந்தி இராணுவத்தால் பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். அது தமிழ் மக்கள் மட்டுமன்றி சர்வதே ரீதியிலும் பேசுபொருளாக இருந்தது. இருப்பினும் யுத்தம் அப்போது இடம்பெற்றமையால் அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களை பாரியளவில் காட்டமுடியாத சூழ்நிலை இருந்தது. இருபது ஆண்டுகள் ஆகியும் அதற்கான நீதியான தீர்ப்புக்கள் வழங்கப்படாத நிலையில், யுத்தத்திற்கு பின்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா, கனகராயன்குளம் மாணவி சரண்ஜா, எள்ளுக்காட்டு சிறுமி ஜெரோமி என வடக்கில் தொடரும் வன்புனர்வு மற்றும் அதனுடன் இணைந்த கொலைச் சம்பவங்கள் இன்று வவுனியா மாணவி ஹரிஸ்ணவி வரை அது தொடர்ந்துள்ளது. தெற்கில் சிறுமி சேயாவும் இவ்வானறான கொடூரமான வன்புனர்வின் பின் கொலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலமைகள் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் இடம்பெற்றாலும் வடக்கில் இது அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். ஏன் எனில் முன்னைய காலங்களில் இவ்வாறான காமுகர்களின் கறைபடிந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை. தற்போது இந்நிலமைகள் தொடர்வதற்கு காரணம் என்ன…?

கடந்த 16 ஆம் திகதி மாணவியான ஹரிஸ்ணவியை வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு பாடசாலைக்கு சென்ற ஆசிரியரான தாயும், மாணவியின் அண்ணனும், தங்கையும் பாடசாலை முடிந்து வீடு வந்து பார்த்த போது அந்த 14 வயது இளம்மொட்டு சிதைக்கப்பட்டு அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தாள். அந்த கணங்களை எந்த தாயால் ஜீரணித்துக் கொள்ள முடியும்…? சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 18 ஆம் திகதியே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மாணவி வன்புனர்வு செய்யப்பட்ட பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதன் பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆயினும் இந்த விசாரணைகள் கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளைப் போன்று ஒரு கண்துடைப்பாகவே பலரும் கருதுகிறார்கள். அதற்கு கிருசாந்தி வழக்கு தொடக்கம் வித்தியா கொலை வழக்கு வரை எமக்கு சான்றாகவே உள்ளது.

viththiyaதற்போது ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வடக்கில் ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என பரவலாக இடம்பெறுகின்றது. அதே நிலை தான் வித்தியாவின் வன்புனர்வின் பின்னரான படுகொலையின் போதும் இருந்தது. ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தல்கள் என வடக்கு மட்டுமன்றி தென்னிலங்கையைக் கூட அது உலுப்பியிருந்தது. அந்தளவிற்கு அது ஒரு மோசமான செயலாக அந்த வன்புனர்வுச் சம்பவம் கறை படிந்திருந்தது. அந்த கொந்தளிப்புக்கள் எல்லை மீறி யாழ் நீதிமன்றம் மீது கல்லெறிக்கின்ற நிலைக்கு கூட சென்றிருந்தது. ஆனால், வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் கடந்தும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. அதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் வித்தியா கொலையுடன் உண்மையில் சம்மந்தப்பட்டவர்களா என்ற சந்தேகத்தை தற்போது ஏற்படுத்தியும் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே அவர்களது டீஎன்ஏ பரிசோதனை அறிக்கையை பொலிசார் நீதிமன்றில் ஒப்படைக்காது இழுத்தடித்து வருவதாக தெரிகிறது.

அதுபோலவே, மாணவி சரண்ஜா மரணம், எள்ளுக்காட்டு சிறுமி மரணம் என்பவற்றிலும் இதுவரை ஒரு நீதியை பெறமுடியவில்லை. இந்த நிலையிலேயே ஹரிஸ்ணவியின் மரணம் இடம்பெற்றுள்ளது. மரணம் இடம்பெற்று பத்து நாட்களுக்கு பின்னரே சந்தேகத்தில் ஒருவர் கைதாகியுள்ளார். இது இலங்கை பொலிசாரின் பலவீனமான தன்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. யுத்தத்தை முடித்தோம் என்று பெருமைப்படும் இந்த அரசாங்கத்தின், பொலிஸ் துறை பலவீனமானதாகவே உள்ளது என்பதை இவை வெளிப்படுதுகின்றன. தெற்கில் சேயா என்கிற சிறுமி கொலை தொடர்பில் பாடசாலை மாணவன் உட்பட சில அப்பாவிகள் கைது செய்யப்பட்டிருந்ததுமம், அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்ததே. அந்தளவிற்கு வன்புனர்வு குற்றவாளியை கைது செய்வதில் பொலிசார் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். அந்த பலவீனத்தை ஹரிஸ்ணவியின் மரணத்திலும் பொலிசார் ஆரம்பத்தில் மேற்கொண்ட விசாரணையில் அவதானிக்க முடிந்திருக்கின்றது.

jeromyகுற்றம் நிகழந்த இடத்தில் இருந்த தடயங்கள் பலவற்றை பொலிசார் பெற்றுக் கொள்ள தவறியிருப்பதாக தெரியவருகிறது. மரணச் சடங்கு முடிந்த பின்னரே கடந்த 19 ஆம் திகதி மரணமடைந்த வீட்டை பொலிசார் பயிற்றப்பட்ட நாய்களின் துணையுடன் தீவிர சோதனை செய்தனர். இதன்போதே கொலையின் போது காணாமல் போனதாக கூறப்பட்ட தொலைபேசி மற்றும் அதன் மின் இணைப்பு வயர் என்பன அறைக்குள் இருந்து மீட்கப்பட்டது. மரணச் சடங்கிற்கு வந்த பலராலும் அவர்களுக்கு தெரியாத நிலையில் சில தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கவும், அழிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, பயிற்றப்பட்ட மோப்ப நாய் சம்பவம் நடைபெற்று 24 மணித்தியாலயத்திற்குள் தான் சிறப்பாக செயற்படும். ஆனால் இந்த விசாரணையில் மூன்று நாட்கள் கழித்தே மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. மழை, பனி, கடும் காற்று என்பனவும் மோப்ப நாயின் செயற்பாட்டில் தாக்கம் செலுத்தும். மோப்ப நாய் செல்வதற்கு முன்னிருந்த மூன்று நாட்களும் வவுனியாவில் கடும் பனி காணப்பட்டிருந்தது. இதனால் தடயங்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது. இது யார் விட்ட தவறு…?

மரணம் நடந்த இடத்தை பொலிசார் சரியான முறையில் பயன்படுத்த தவறியமைக்கு காரணமும் உள்ளது. ஆரம்பத்தில் இதனை தற்கொலை என பொலிசார் கருதியிருந்தனர். மரணமடைந்த மாணவி வெள்ளை சீருடை வாங்கித் தருமாறு அன்றைய தினம் தனது தாயாருடன் வாக்குவாதப்பட்டிருந்தாள். அதனை பொலிசின் ஆரம்ப கட்ட விசாரணையில் தாயார் தெரிவித்ததும், அதனால் தான் மாணவி இறந்திருக்கக் கூடும் என அவர்கள் கருதியிருந்ததாகவே பலரும் தெரிவிக்கின்றனர். அதனாலேயே, விசாரணையில் தாமதம் மற்றும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மகள் இறந்த நிலையில் மன ரீதியாக பாதிப்படைந்திருந்த தாய் கூறும் கருத்தை வைத்து பொலிசார் உடனடியாக தற்கொலை என்ற முடிவை பொலிசார் எப்படி எடுத்திருக்க முடியும்..? அந்த மாணவியின் உடலில் தற்கொலைக்கான தடயங்கள் இருக்கவில்லை என சடலத்தை பார்த்த சாதாரண மக்களே கூறும் போது பொலிசார் அதனை ஊகித்து கொள்ள முடியாமல் போனமை எப்படி…?

saranyaஇவ்வாறு பொலிஸ் விசாரணை கடந்த காலங்களைப் போன்று ஹரிஸ்ணவியின் மரணத்திலும் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் கூட அவர்களுக்கு தண்டனை வழங்க இலங்கை நீதித்துறை எடுக்கும் காலம் கூட அதிகமே. விசேட நீதிமன்றம் ஊடாக வித்தியா கொலை வழக்கை விசாரிப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி இன்று ஒரு வருடம் கடந்தும் அதனை செய்ய முடியாது இருக்கிறார். இவ்வாறான குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் வன்புனர்வு குற்றவாளிகள், கொலைக் குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணைகளின் பின் குறைந்த தண்டனைகளுடன் மீண்டும் வலம்வருவதை நாம் காணமுடிகிறது. இந்த நிலையிலேயே மாணவர்கள் ‘இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா…?’ என்ற சுலோக அட்டைகளுடன் போராட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

943992_10207301960202325_6132060577116377007_n

N5