வரப்போகும் தீர்வு என்ன?
– பாரதி –
அரசியலமைப்புப் பேரவையின் 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் சனிக்கிழமை 10 ஆம் திகதி வெளிவரவிருக்கும் நிலையில். அதன் உள்ளடக்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பது தொடர்பான ஊகங்கள் பரபரப்பாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இனநெருக்கடிக்கான நிரந்தமான ஒரு தீர்வை இது வழங்குமா என்பது தொடர்பில் அனைவரது கவனமும் குவிந்திருக்கின்றது. உயர் அரசியல் மட்டங்களிலிருந்து கசியும் தகவல்களின்படி இடைக்கால அறிக்கை தொடர்பில் வழிநடத்தல் குழுவில் கருத்தொருமைப்பாடு எதுவும் இதுவரையில் ஏற்படவில்லை. அடுத்துவரும் தினங்களில் வழிநடத்தல் குழு இதனை இறுதியாக்கம் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்.
உறுதியான ஒரு தீர்வை வழிநடத்தல் குழு கொண்டுவர வேண்டும் என்பதற்காக தமது நல்லெண்ணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பின் போது ஆதரவாக வாக்களித்ததன் மூலமே இந்த நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டது என்பதை கடந்த வாரத்தில் பார்த்தோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட்டமைப்பின் இந்த நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டவராக, வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அதன் தலைவர் இரா.சம்பந்தனை வாயாரப் புகழ்ந்திருக்கின்றார். மறுபுறத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதான் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
டிசெம்பர் 10 ஆம் திகதி இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் உடனடியாக அதன் மீதான விவாதம் எதுவும் இடம்பெறாது. ஆனால், அன்று மாலை பட்ஜெட் மீதான இறுதி வாக்களிப்பு இடம்பெறும். ஜனவரி 09,10,11 ஆகிய திகதிகளிலேயே வழிநடத்தல் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெறும். இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இறுதி வரைபில் உள்வாங்கப்படும். அதன் பின்னர் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கை மார்ச் மாதத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மார்ச் மாதத்தில் இடம்பெறவிருக்கும் ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்னதாக ஏதாவது முன்னேற்றத்தைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்குள்ளது.
இணக்கத்துக்கு
தடைகள் என்ன?
பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, ஒற்றையாட்சி என்பனவற்றை மாற்ற முடியாது என்பதில் ஜாதிக ஹெல உறுமயவும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உறுதியாகவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் உடன்படப்போவதில்லை. மகிந்த அணியின் தலைவராகக் கருதப்படும் தினேஷ் குணவர்த்தன இந்த இரண்டு விடயங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது என அடித்துக்கூறிவிட்டார். இந்த விடயங்களில் இணக்கம் ஏற்படவில்லை என்றால் தான் வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் அவர் எச்சரித்திருக்கின்றார். ஆக, இந்த விடயங்களில் வழிநடத்தல் குழுவில் கருத்தொருமைப்பாட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லை. இதனைவிட வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை. இணைப்புக்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை என எம்.ஏ.சுமந்திரனே யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்திவிட்டார்.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமது 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் கடந்த வார இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியிருக்கின்றார். நியாயமான ஒரு தீர்வை வழிநடத்தல் குழு மூலமாகக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை கூட்டமைப்பின் தலைவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் கடும் போக்கில் இந்த விவகாரத்தை அணுகுவதால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஏனையவர்களும் குழம்பத் தொடங்கியிருக்கின்றார்கள். மகிந்தவின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டு செல்வதும், அடுத்த வருடத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதும்தான் மைத்திரி தரப்பை குழப்பும் விடயங்கள். அடுத்த தேர்தலில் தாம் மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் மைத்திரி தரப்பு அவதானமாக இருக்கின்றது.
வழிநடத்தல் குழுவில்
இனவாத சக்திகள்..
ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டன. ஆனால், அவை முக்கியமானவையல்ல. அதில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் வராமல் போகலாம். இல்லதவை சில வரலாம். ஆனால், வழிநடத்தல் குழுவின் அறிக்கைதான் இறுதியானது. இந்தக் குழுவில் சிங்களக் கடும் போக்காளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் நன்கு திட்டமிட்ட முறையில் செயற்படுகின்றார்கள் என்பது தெரிகின்றது. அவர்கள் மட்டுமல்ல. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க.விலுள்ள சிலர் கூட, கடும் போக்கில்தான் உள்ளனர். இந்த நிலையில், அவர்களுடைய நிலைப்பாடு வழிநடத்தல் குழுவில் மேலோங்குவதற்கான வாய்ப்புக்கள் – செல்வாக்குச் செலுத்தும் நிலை அதிகமாகவுள்ளன என்பது மறுப்பதற்கில்லை.
இது தொடர்பில் யாழ். மாவட்ட முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து ஒன்றும் கவனிக்கத்தக்கது. “இவர்கள் சமஷ்டியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற ஒரு தீர்வையாவது முன்வைக்குமாறு சம்பந்தன் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்த்தோம். சந்திரிகாவும் ஆளும் தரப்பில் செல்வாக்கான ஒருவராக இருப்பதால் அவ்வாறான நம்பிக்கை எமக்கு இருந்தது. அதற்குள் முஸ்லிம்களுக்கான தனி அலகு குறித்து பின்னர் பேசியிருக்கலாம். ஆனால், அவ்வாறான தீர்வு ஒன்று குறித்துக்கூட பேசப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். அதாவது, நல்லாட்சியில் இருக்கக்கூடிய தமிழர்களுடைய உரிமைகளை ஏற்கக்கூடிய சக்திகள் கூட இப்போது மொனமாக இருக்கின்றன என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
கூட்டமைப்பு – ஜனாதிபதி
பேசிக்கொண்டது என்ன?
வழிநடத்தல் குழு தமக்குச் சாதகமாகச் செல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்ட நிலையில்தான் ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்து சம்பந்தன் பேசியிருக்கின்றார். தன்னுடன் 16 எம்.பி.க்களையும் அழைத்துக்கொண்டு சென்றதன் மூலம் தனது பலத்தையும் அவர் காட்ட முற்பட்டிருக்கின்றார். பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய பின்னர்தான் அந்தச் சந்திப்பையும் அவர் மேற்கொண்டார். அந்தச் சந்திப்பின் போது அவர் முன்வைத்த கோரிக்கைகளும் வழிநடத்தல் குழுவை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே இருந்தது.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி சொன்ன ஒரு விஷயம், ஆச்சரியமானதாக இருந்தாலும் உண்மை நிலையை அம்பலமாக்கியிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவுடன் இதுவிடயமாக பேசுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தான் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அழுத்தம் கொடுப்பவராக, அதனை இனவாதப் பாதையில் கொண்டு செல்பவராக மகிந்த இருக்கின்றார் என்பதை மட்டுமன்றி, இலங்கை அரசியலில் செல்வாக்கான ஒருவராக மகிந்த இருப்பதையும் இதன்மூலம் ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார் என்றுதான் கொள்ள வேண்டும். அதேவேளையில் மகிந்தவுடன் ரணில் என்ன விஷயத்தை பேசப்போகின்றார்? அதன் மூலம் ஒரு மாற்றம் வருமா? ரணில் பேசியவுடன் மகிந்த மாறிவிடுவாரா? என்பனவும் கேள்விக்குறிதான்.
அரசியல் சீர்திருத்தத்தில்
வரக்கூடிய மாற்றங்கள்..
வழிநடத்தல் குழுவின் அறிக்கை, பெருமளவுக்கு சிங்கள கடும் போக்காளர்களின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கும் என்றாலும், சில விடயங்கிலாவது முன்னேற்றத்தைக் காட்ட வேண்டிய தேவை அரச தரப்புக்கு இருக்கின்றது. அதனால், கடும் போக்காளர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தாமல், தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் திருப்திப்படும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்படலாம். அது தொடர்பில் உள்ள நிலைமைகளையும் பார்ப்போம்.
இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் 1988 இல் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பன சட்டப் புத்தகத்தில் மட்டும்தான் இருக்கின்றது. இந்த விடயங்களில் சிறிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர் தரப்பையும், இந்தியாவையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கு இவற்றில் கொஞ்சம் மென்போக்கு கடைப்பிடிக்கப்படலாம். இருந்தாலும், பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில்தான் பொலிஸ் இருக்கும். ஆட்சேர்ப்பு போன்ற சில விடயங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படலாம்.
இரண்டாவதாக எதிர்பார்க்கக்கூடியது. ஆளுநரின் அதிகாரக் குறைப்பு. நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவராகவே ஆளுநர் இருக்கின்றார். அவரது அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் எனவும். சம்பிரதாய பூர்வமான ஒருவராக அவர் இருந்தால் போதுமானது எனவும் த.சித்தார்த்தன் தலைமையிலான உப குழு ஏற்கனவே யோசனை முன்வைத்திருக்கின்றது. இதன்படி ஆளுநரின் அதிகாரங்கள் வரையறுக்கப்படலாம். இதனைவிட, வேறு எதுவும் நடைபெறப்போவதில்லை என நம்பகமான வட்ட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
இதனை ஒரு முன்னெற்றமாக கூட்டமைப்பு காட்டலாம். இப்போதைக்கு இதனை வைத்துக்கொண்டு மேலும் முன்னேறலாம் என சம்பந்தன் சொல்லலாம். சமஷ்டியா ஒற்றையாட்சியா என்ற ‘பிரான்ட்‘ முக்கியமில்லை. உள்ளடக்கம்தான் முக்கியம் என வசனம் பேசலாம். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் இதனை ‘சந்தைப்படுத்துவது’ கூட்டமைப்புக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. வழிநடத்தல் குழுவில் நடைபெறும் சம்பவங்களும், கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களும், இதற்கு மேல் எதுவும் நடைபெறாது என்பதை உணர்த்துவதாகத்தான் இருக்கின்றது. அதாவது, நாம் ஆரம்பித்த புள்ளிக்கே திரும்ப வரப்போகின்றோமா?




