வரவு செலவில் வரி , தண்டப்பணம் அறவிடும் முறை : ஜே.வி.பி வெளியிடும் தகவல்கள்
சிறுவர்களுக்கு டொபி சோக்லட் கொடுத்து ஏமாற்றுவது போல் வரவு செலவு திட்டத்தினூடாக சில பொருட்களின் விலைகளை குறைத்து மக்களை ஏமாற்றியுள்ள அரசாங்கம் அந்த விலைக் குறைப்புக்குறிய நட்டத்தை தொலைபேசி கட்டணங்களுக்கான வரியின் மூலம் ஈடுசெய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இவ்வாறு கூறியுள்ளார்.
ராஜபக்ஷ ஆட்சியின் வரவு செலவு திட்டத்திற்கும் மைத்திரி – ரணில் ஆட்சியின் வரவு செலவு திட்டத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ராஜபக்ஷக்கள் போல் கடன் , வரி மற்றும் தண்டப்பணத்தை அடிப்படையாக கொண்டே தற்போதைய அரசாங்கமும் வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களிடம் விமான நிலைய வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகிறார்கள் அவர்கள் இலங்கைக்கு வந்து மீண்டும் தொழிலுக்காக செல்லும் போது 7500 ரூபாவை வரியாக செலுத்தும் நிலைமை உருவாகியுள்ளது. அத்துடன் வழக்கு தொடர்ந்தாலும் வரியை அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருளை திருடன் திருடி சென்ற பின்னர் அவனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தால் வழக்கு தொடருபவருக்கு வரியை செலுத்தும் நிலைமை ஏற்படவுள்ளது.
இதேவேளை டிஜிடல் மயப்படுத்த வேண்டும். நாட்டுக்கு இலவச வை பை என்றொல்லாம் கூறிவிட்டு 25 வீதம் வரை இணையத்தள வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய சிம் கார்ட் ஒன்றை செயற்படுத்த 200 ரூபா கட்டணத்தை அறவிடும் நிலைமையும் உருவாகியுள்ளது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் ஆசியரியர்களுக்கும் டெப் கணனியை வழங்க நடவடிக்கையெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் கடந்த வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் வழங்கப்படவில்லை. இது மட்டுமன்றி வாகனங்கள் வீதி சட்டங்களை மீறும் போது அறவிடும் ஆகக் குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் பொலிஸார் இலஞ்சம் பெறும் சம்பவங்கள் அதிகரிக்கவுள்ளது. அதேபோன்று வாகன விபத்துக்களின் போது காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது 25000 ரூபா கட்டணத்தை காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் காப்புறுதி நிறுவனங்கள் அதனை வாகன உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறைகளை அறிமுக்கப்படுத்துவார்கள். இது போன்று எத்தனையோ வரி மற்றும் தண்டப்பண முறைகளை புதிதாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது ஒரு புறமிருக்க சின்ன பிள்ளைகளுக்கு டொபி , சொக்லட்கள் கொடுத்து ஏமாற்றுவது போல் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அந்த பொருட்களின் விலை குறைப்பை கூட்டினால் 67 ரூபாவே குறைகிறது. ஆனால் அதனை வேறு வழியில் அதாவது தொலைபேசி அழைப்புக்கான வரியினூடாக அறவிட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சமூர்த்தி பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது. இதனை பெரிய எழுத்தில் எழுதிவிட்டு அந்த அரிக்கான பணம் சமூர்த்தி கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படும் என்பதனை சிறய எழுத்தில் குறிப்பிட்டுள்ளனர்.தந்திரமான முறையில் சகலதும் குறிப்பிடப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




