வறட்சியால் 4 மாகாண மக்கள் பாதிப்பு!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
27,885 குடும்பங்களைச் சேர்ந்த 89,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,098 குடும்பங்களைச் சேர்ந்த 5,734 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,726 குடும்பங்களைச் சேர்ந்த 5,655 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,747 குடும்பங்களைச் சேர்ந்த 8,983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சமனல நீர்த்தேக்கத்திற்கு அருகில் இன்று (05) விவசாயிகள் குழுவொன்று வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல குளத்தில் இருந்து போதியளவு நீர் கொள்ளளவை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தண்ணீர் திறக்கும் வரை அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி இன்று சமனல நீர்த்தேக்கத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
வளவ மகாவலி பிரதேசத்தில் உள்ள 12,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெல் வயல்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதுடன், இன்று நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 1.4 வீதமாகவே காணப்படுகின்றது.
இதனால் சுமார் 86,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு போதியளவு நீரை திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இதேவேளை, சமனல குளத்திலிருந்து 20 நாட்களுக்கு மின்சார தடையின்றி நீர் விநியோகம் செய்ய முடியும் என நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பொலன்னறுவையில் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள தாம், பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-(3)




