வலிமையான இந்திய எதிர்ப்பரசியலின் அவசியம்
லோ. விஜயநாதன்
இலங்கைத் தீவில் தமிழ் தேசியத்தின் இருப்பு இந்தியா சார்ந்த மாயையினூடாக கட்டமைக்கப்பட்டதே அதன் ஒட்டுமொத்த அழிவுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த மாயைக்கு மூன்று பிரதான காரணங்கள் வழிவகுத்தன. ஒன்று இரண்டு நாடுகளும் அப்போதைய காலத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டிய தேவை இருந்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விடுதலைப் போராட்டம் இயல்பாகவே எமது தலைவர்களின் பால் இந்தியா சார்ந்த ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இரண்டாவது எம்மினம் எம் எல்லையோரத்தில் பலகோடியில் இருப்பதனால் எமக்கான அரணாக இந்தியா இருக்கும் என்ற இயல்பான நம்பிக்கை ( ஆனால் அவர்கள் இந்தியன் என்ற அடையாளத்துக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள்). மூன்றாவது எம்மினத்தில் அக்காலகட்டத்தில் உலக அரசியல்-விஞ்ஞான அறிவியலில் புலமையாணவர்கள் மிக அரிதாகவே காணப்பட்டமை. அவ்வாறு இருந்தவர்கள் கூட பிரதான தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்த மூன்றாவது காரணம் நிவர்த்திக்கப்பட்டிருக்குமேயானால் முன்னைய இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஆரம்பகாலத்தில் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நடப்பதுபோல் தன்னைக்காட்டிக் கொண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி அதனூடாக சிறிலங்கா அரசை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எமது பிரச்சனையை இந்தியா பயன்படுத்தியது. சிறிலங்காவை கையாள்வதற்காக உருவாய்க்கப்பட்ட ‘புளொட்’ அமைப்பை பயன்படுத்தி மாலைதீவை தனது பிடிக்குள் கொண்டுவரும் அளவுக்கு இந்திய எம்மை பயன்படுத்தியது. அதேசமயம் சிறிலங்காவோ இந்திய எதிர்ப்பு அரசியலினூடாக தனது சவால்களை முறியடித்து சாதித்து வந்துள்ளது. அந்தவகையிலேயே தமிழீழ விடுதலை போராட்டத்தை அழிப்பதற்காக இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தை மேற்கொண்டதுடன் பிரதியுபகாரமாக இந்திய நலனுக்கெதிராக இலங்கைத்தீவை வேறு நாடுகள் தளமாக பாவிப்பதற்கு அனுமதிப்பதில்லை என்ற உத்தரவாதத்தை வழங்கியது (குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தை). தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான தனது இனப்படுகொலைக்கு இந்தியாவை அரணாக வைத்துக்கொண்டு செயற்பட்டு வந்த சிறிலங்கா இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட வட-கிழக்கு இணைப்பை பிரிப்பதற்கு இந்திய தரப்பில் ஆட்சேபனை ஏற்படாதவாறும் பார்த்துக் கொண்டது. இதற்கு பிரதியுபகரமாகவே திருகோணமலையை அண்மித்த சம்பூர் பகுதி அனல்மின்நிலையம் அமைத்தல் என்ற போர்வையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

இன்று சிறிலங்கா புதிய அரசியல் அமைப்பு எனும் பெயரில் முற்றிலும் செயலற்றதாக்கப்படவுள்ள இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் ஏற்படாதிருக்கும் வகையில் திருகோணமலை துறைமுகத்தை சுற்றியுள்ள எண்ணய் குதங்களையும் இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. அண்மையில் இந்திய வெளியுறவுச் செயளாலர் கூட்டமைப்புடனான சந்திப்பில் வட-கிழக்கு இணைப்பு தற்போதைய நிலையில் சாத்தியமற்றது என்று கூறியிருப்பது இதனடிப்படையில் தான். பொதுவாகவே இராஐதந்திர நகர்வுகளில் இந்தியாவைக்காட்டிலும் சிறிலங்கா சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
விடுதலைப்புலிகள் இந்தியாவை ஓரளவிற்கு புரிந்துகொண்டமையால் தான் விடுதலைவேண்டி போராட புறப்பட்ட மற்றய போராளிக்குழுக்கள் எல்லாம் இந்தியாவை நம்பி இருந்த இடம் தெரியாமல் போக விடுதலைப்புலிகள் மட்டும் மிகப் பெரிய இராணுவமாக வளர்ச்சியடைய முடிந்தது. ஆனால் புலிகளால் கூட இந்தியாவை முற்றிலுமாக புரிந்துகொள்ள முடியாமையின் விளைவே தமது மிகப்பெரிய இராணுவ பலத்தை பின்னாளில் தக்கவைக்க முடியாமல் போனது. அதாவது இந்தியாவுக்கு எதிரான எந்த நாடுகளுடனும் எவ்விதமான தொடர்புகளையும் வைத்திருப்பதில்லை, தமிழீழ நிலப்பரப்பை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதில்லை என்று புலிகள் வகுத்துக்கொண்ட கொள்கையே இறுதிப்போரில் இறுதிப்போரில் எந்த ஒரு நாடும் கூட கைகொடுக்க முடியாமல் போகும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. .
பொதுவாகவே தமிழர் தரப்பில் காணப்படும் இந்தியாவை எதிர்த்து தமிழர் தரப்பு எதையுமே சாதிக்க முடியாது என்ற காலங்காலமாக நம்பப்பட்டுவரும் குருட்டு வாதமே மேற்சொன்ன தோல்விகளுக்கு காரணமாகும் . இந்தவிடத்தில் சிறிலங்காவை எடுத்து நோக்குவோமாயின் மகாவம்ச காலத்திலிருந்து பரம எதிரியாக வரிந்துகொண்ட இந்தியாவை எவ்வளவு லாவகமாக கையாண்டுள்ளதென்பதை கண்டுகொள்ளலாம். இந்தியாவை மாத்திரமல்ல சீனா, அமெரிக்கா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற ஒன்றோடொன்று முரண்பட்ட நாடுகளை கூட எமக்கெதிராக ஒரே அணியில் கொண்டுவந்து செயற்படுத்த சிறிலங்காவால் முடிந்துள்ளது. அதுமட்டுமல்ல பாலஸ்தீன விடுதலைப்போராட்டத்தை முதலாவதாக அங்கீகரித்ததுடன் அப்போராட்டத்தை ஒடுக்கும் இஸ்ரேலுடனும் மிகச்சிறந்த உறவை வைத்துள்ளமையானது சிறிலங்காவின் மிகச்சிறந்த இராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாகும் . சிறிலங்கா என்ற இறைமையுடைய நாடு என்ற அங்கிகாரமே இவற்றுக்கெல்லாம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று எமது மேதாவிகள் கூறுவார்கள். அதில் சற்று உண்மை உள்ளது. ஆனால் தமிழர் தரப்பில் காணப்படும் இராஜதந்திர செயற்பாட்டு வெற்றிடமே உண்மையில் சிறிலங்காவின் இந்த வெற்றிகளுக்கு எல்லாம் பிரதான காரணமாகும்.
இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஈழத்தமிழர்களுக்காக செயற்பட்டது கிடையாது . அது முற்றுமுழுதாக தனது நலத்துக்காகவே எமது பிரச்சனையை பயன்படுத்தி வருகிறது . முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பு நடைபெற்று முடிந்தகையுடன் யாழில் அவசர அவசரஅவசரமாக இந்திய துணைத்தூதரகம் நிறுவப்பட்டது. இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அன்றி மாறாக தமிழ்மக்களிடத்தில் இந்தியாவுக்கு எதிராக கடந்த காலத்தில் ஏற்பட்ட அதிருப்தியை தணிப்பதற்கும் பெருமளவு வெளிநாட்டு வருமானத்தை பெறுகின்ற யாழ் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காகவுமேயாகும். இவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே யாழில் செயற்படுகின்ற ஊடகங்களை தனது செல்வாக்குக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை இந்திய துணைத்தூதரகம் மேற்கொண்டது. இன்று யாழில் நடக்கும் சகல கலாச்சார நிகழ்வுகளுக்கும் இந்திய துணைத்தூதரகத்தின் பிரதிநிதிகள் தவிர்க்கப்பட முடியாத விருந்தாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் என்றரீதியில் வருங்கால சுமந்திரன்களை உருவாக்குவதற்கும் மேற்கத்தைய நாடுகளுக்கு செல்லும் மாணவர்களை தன்நாட்டிற்கு ஈர்த்து வருமானத்தை ஈட்டிக்கொள்ளவும் முயற்சிக்கின்றனர். சைவசமயம் என்ற அடையாளம் இன்று இந்து சமயமாக மாற்றப்பட்டு ஆஞ்சனேயர் படையெடுப்புக்களும் சிவசேனா மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் பலியான இந்திய இராணுவ வீரர்களின் நினைவு தூபிகள் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் புதுப்பொழிவு கண்டுவருகின்றன. ஆனால் இன்றுவரை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு ஒரு செங்ஙகல் கூட நினைவாக நடப்படவில்லை. ஆகமொத்தத்தில் இன்றைய வடமாகாணம் இந்தியாவின் ஒரு அங்கீகரிக்கப்படாத மாநிலமாக
மாறிவருகின்றது.
தனியே புலிகளை அழிப்பதால் மட்டும் அச்சுறுத்தல் அகன்றுவிடவில்லை என்பதால் தமிழ் தேசியத்தின் கோட்பாடுகளை அழிக்கப்படுவதனுடாக மட்டுமே முற்றுமுழுதான அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடமுடியும் என்று கருதி இன்றைய தமிழ் தலைவர்களை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் அரசியல் தீர்வு என்ற மாயமானை காட்டி பயன்படுத்திவருகின்றன. இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே வட- கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை, சமஷ்டி தீர்வு எட்டாக்கனி என்றெல்லாம் கூறவைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் ,மக்களை தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உட்படுத்தும் வகையில் ஒற்றை ஆட்சியும் பெளத்த மத்ததிற்கான முன்னுரிமையும் புதிய அரசியல் அமைப்பிலே ஏற்கப்பட தமிழர் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதுவரை உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் எந்த அரசியலமைப்பும் தமிழ் மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறைப்பதற்காக தமிழர் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோரை வைத்து இருக்கின்ற அதே யாப்பை புதிய யாப்பு என்ற பெயரில் தமிழ் மக்களின் பங்களிப்புடன் கொண்டுவரும் கைங்கரியம் நடைபெறுகிறது. இத்தகைய ஒற்றை ஆட்சியினை மையப்படுத்திய அரசியல் யாப்பைபே இந்தியாவின் விருப்பமும் கூட. இந்திய கொள்கைவகுப்பாளர்களுக்கும் சிங்களத்தை போன்றே சமஷ்டி என்றால் எங்கே தனது மானில சுயாட்சிக் கட்டமைப்பு உடைபட்டுவிடுமோ என்கிற பயம் தொடர்ந்து இருந்துவருகிறது. அண்டை நாடுகளிலும் கூட சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு ,மாற்றம் ஏற்படுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. நேபாளமானது சமஸ்டி ஆட்சிக்கட்டமைப்பை கொண்ட (குறைந்தளவான அதிகாரபரவலாக்கம்) புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தபோது அதை விரும்பாத இந்தியா அங்குள்ள சிறுபான்மை மக்களை அதற்கெதிராக தூண்டிவிட்டது. (ஏக்கய ராட்சிய (ஒற்றை ஆட்சி) என்ற சொல்லை ஆட்சிமுறையாக கண்டுபிடிக்கத் தெரிந்த எம்மவர்களுக்கு நேபாளத்தை உதாரணமாக காட்டத்தெரியவில்லை. ) இந்தியாவின் பாதுகாப்பானது ஒன்றில் இலங்கையின் இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அரணாக வைப்பதன் ஊடாக உறுதிப்படுத்த முடியும் அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிஉச்ச பட்ச அதிகாரத்தை (கூட்டாட்சி) வழங்குவதனுடாக அதற்கூடாக மத்தியில் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை தமிழர் தரப்பை பயன்படுத்தி நீக்கமுடியும். இந்த இரு முறைகளில் ஒன்றில் தான் இந்தியாவின் பாதுகாப்பு தங்கியுள்ளது. அதைவிடுத்து காலம் காலமாக மகாவம்சத்தின் ஊடாக இந்தியாவை எதிரியாக காட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாதத்தை அரவணைப்பதன் ஊடாக ஒரு போதும் இந்தியாவின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட முடியாது.
நாம் இந்தியாவுக்கு எவ்வளவு தூரம் மிக முக்கியமாணவர்கள், எமது பேரம்பேசும் பலம் எவ்வளவு என்பதை விளங்கிக் கொள்ளாமல் இந்தியாவுடன் அடிபணிவு அரசியலையே செய்துவருகின்றோம். இது தனியே இந்தியாவுக்கு மட்டுமன்றி ஏனைய வல்லரசுகளுக்கும் பொருந்தும். எண்பதுகளில் இந்தியாவானது சீனாவைவிட அமெரிக்கா இலங்கையில் தளம் அமைத்துவிடக்கூடாது என்றளவிலேயே செயற்பட்டதுடன் 13வது திருத்தச்சட்டமும் அதற்காகவே உருவாக்கப்பட்டது. இன்று இந்திய-அமெரிக்க உறவென்பது சீனாவை மயப்படுத்தியே உள்ளதென்பதும் 2030ல் சீனாவின் இன்றைய வளர்ச்சி நிலையை இந்தியா அடையும் என எதிர்பாக்கப்படும் நிலையில் அப்போது இவ்வுறவானது முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையிலேயே காணப்படும். இதை எதிரபார்த்தே அமெரிக்கா எச்சரிக்கையுடன் தமிழ் மக்கள் விடயத்தை கையாண்டுவருகிறது. இறுதிப்போரில் அமெரிக்காவின் சில நகர்வுகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகளை எடுத்தமையும் இதன் அடிப்படையில் தான். ஆக மொத்ததில் உலகின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையை கொண்ட தெற்கு-தென்கிழக்கு ஆசியாவே உலகின் மிகமுக்கியமான நகர்வுகளை தீர்மானிக்கபோகின்ற நிலையில் எமக்கான வாய்ப்புக்களும் அதிகளவிலேயே காணப்படுகின்றன . இந்நிலையில் இலங்கைத்தீவின் கிழக்குக் கடல்பரப்பும் திருகோணமலை துறைமுகமும் மிகமுக்கியம்வாய்ந்த மூலோபாய இடமாக காணப்படுகிறன.

வடகிழக்கு தமிழர் தாயக கோரிக்கை கைவிடப்பட்டால் நாம் இலங்கைத்தீவின் மிகபலம் குறைந்த 3வது சிறுபான்மையான இனமாக மாற்றப்பட்டு எமது அடையாளம் முற்றிலும் அழிக்கப்படும் நிலையே ஏற்படும். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவானது எமது பிரச்சினையை பயன்படுத்தி திருகோணமலை துறைமுகத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் வளைத்துபோடுவதற்கு முயற்சிப்பதுடன் தனது பொருளாதார முதலீட்டு திட்டங்களை நடைமுறைபடுத்துவதிலும்தான் தீவிரமாக உள்ளது. அதாவது குழம்பிய குட்டையில் மீன்பிடி கூடுதலாக இருக்கும் என்பதற்கு இணங்க தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை இந்தியாவின் பொருளாதார-இராணுவ நலன்களை கூடுதலாக அடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்று இந்தியா நம்புகிறது. அதற்கு ஒத்துப்போகும் தமிழ் தலைமைகளை பேணுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.
தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தலைமைகளுக்கெதிராக ஏற்பட்டுள்ள அதிருப்தி அலை காரணமாக தனது திட்டங்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விக்னேஸ்வரனை தம்மை நம்ப வைத்து அவரை தம்பக்கம் வைத்திருந்து கட்டுப்படுத்தும் செயற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
நாம் ஒரு வலிமையான தேசமாக விடுதலைப்புலிகளின் காலத்தில் பரிணமிக்க இருந்தபோது தனது பாதுகாப்பு நிமித்தம் அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய இந்தியா இனவழிப்பு குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தியாவது தமிழ் மக்களுக்கு பரிகார நீதியினூடாக ஒரு அதிகூடிய அதிகாரப்பரவலாக்கத்தை பெற்றுக்கொடுத்து தனது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் இந்தியா தவறி உள்ளது. தொடர்ந்தும் தவறான சிந்தனையுயுடன் இந்தியா செயற்பட்டுவரும் நிலையில் நாம் எமக்கான பூகோள அரசியல் ரீதியான வாய்ப்புக்களை பயன்படுத்தி ஒரு வலிமையான இந்திய எதிர்ப்பு தமிழர் அரசியலை முன்னெடுப்பதே தமிழ் மக்களுக்கு ஆகக்குறைந்தது ஓரளவு திருப்தியான தீர்வையெனும் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். இதன் மூலம் தமிழர் தாயகத்தின் வளங்கள் இந்தியாவினால் சூறையாடப்படுவதை தடுக்க முடிவதுடன் சகோதர சிங்கள இனத்தின் மனங்களைக் கூட வெல்லமுடியும். ( பிரேமதாசா – விடுதலைப் புலிகள் உறவைப் போல). இதில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று தமிழர் தரப்பால் கொடுக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இந்தியாவை எமக்கு சார்பான நிலைக்கு மாற்றுவதனுடாக எமது இலக்கை அடையும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். இல்லையென்றால் மேற்கு நாடுகளின் நலன்களை தமிழர் தரப்பு திருப்திபடுத்துவதனுடாக எமது நலன்களை பூர்த்தி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். புலிகள் இதைச் செய்யதவறியதன் விளைவே அவர்கள் காலத்தில் எட்டப்படக்கூடிய நிலையிலிருந்த தமிழீழ தனியரசு கைவிட்டுச் சென்றது.




