வலி வடக்கில் பாடசாலைகள், தேவாலயங்கள், வீடுகளை தரைமட்டம் செய்த இராணுவம்
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாடசாலைகள் , தேவாலயங்கள் மற்றும் வீடுகள் படையினரால் தரைமட்டமாக்கப் பட்டுள்ளதாகவும் இந்த இடங்களில் அகக் குறைந்தது ஒரு உல்லாச விடுதியை படையினர் அமைத்து இயக்கி வருவதாக வலி வடக்கு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமது வீடுகளுக்கு திரும்ப உதவுமாறு அமரிக்காவின் ஒக்லாந்து நிறுவனத்துக்கு உதவி கோரி எழுதியுள்ள கடிதத்திலேயே வலி வடக்கு மக்கள் இந்த விபரத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் ஒக்லாந்து நிறுவனத்துக்கு எழுதிய இந்த கடிதம் இந்த நிறுவனத்தால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ‘வீடு திரும்ப காத்துக்கொண்டிருத்தல்: யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தொடரும் துன்பங்கள் ‘ என்ற ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படாத தமது நிலங்களும் இவ்வாறு படையினரால் உல்லாச விடுதிகள் அமைப்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று இந்த மக்கள் இந்த கடிதத்தில் அச்சம் வெளியிட்டுள்ளனர்.




