செய்திகள்

வளம் நிறைந்த எமது மண்ணில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகளை எங்களுக்குப் பெற்றுத்தாருங்கள்

பா.ஜதுர்சிகா

எவரிடமும் கையேந்தி வாழாத நிலையினைக்கொண்ட  கடல் தொழில் வளம் நிறைந்த எமது மண்ணில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகளை எங்களுக்குப் பெற்றுத்தாருங்கள் என்று கிளிநொச்சி இரணைதீவு கடற்தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து  வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு எனும் கடற்தொழில் கிராமத்தில் கடந்த பல தலைமுறைகளாக வாழ்ந்த 240 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டன.

யுத்தம் நிறைவு பெற்று ஏழு ஆண்டுகளும் இந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகளையும் கடந்தபோதும் அவர்களது சொந்த நிலத்தில் சென்று வாழ்வதற்கான அனுமதிகளோ அல்லது தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகளோ இன்று வரை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அதற்கான அனுமதிகளை இந்த நல்லாட்சி அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என இரணைதீவு மக்கள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு எனும் இரு தீவுகளைக்கொண்ட கடற்தொழில் கிராமம் அதாவது பெரிய தீவினையும் சிறிய தீவினையும் பிரிக்கும் வகையில் ஆறு ஒன்று உள்ளது இதனை இணைக்கும் வகையில் பெரிய தீவில் இருந்து சிறிய தீவிற்கு செல்வதற்கான பாதையொன்று காணப்படுகின்றது.Exif_JPEG_420

இரணைதீவின் வடபகுதியின் சேமக்காலையும் கிழக்குப்பகுதியில் இடையாறும் தென் பகுதியில் கொக்குபிட்டியும் மேற்கு பகுதியில் குதிரை முணங்கு குளமும் காணப்படுகின்றதுடன் இங்கு வாழ்ந்த சமுகம் கடற்தொழிலை பரம்பரையாக மேற்கொண்டு வந்துள்ளன.

இதனால் இந்த மக்கள் கடலோடும் திறனும் கடற்தொழில் மற்றும் கடல் பற்றிய அறிவும் அனுபவமும் கொண்டவர்களாகவும் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கடல் பற்றிய அறிவினை கொண்டவர்களாகவே காணப்பட்டதுடன் பெண்கள் கடலுக்குச் சென்று அட்டைத்தொழில் மற்றும் மட்டிபிடித்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டு தமக்கான வருமானத்தைப் பெற்று வந்த ஒரு வளமான இடம் என இரணைதீவின் பூர்வீக மக்கள் தெரிவித்துள்ளனர்.Exif_JPEG_420

இரணைதீவின் சின்னதீவில் புனித செபஸ்தியார் ஆலயமும் பெரிய தீவில் புனித செபமாலை ஆலயமும் இரணைதீவில் போத்துக்கேயர் காலத்தில் முருகை க்கற்களால் கட்டியெழுப்பப்பட்ட வெளிச்சக்கோபுரமும் இவற்றை விட கடந்த 112 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பாடசாலையும் இரணைதீவு மக்களின் அடையாளமாகவும் ஆதாரங்களாகவும் அமைந்துள்ளன.

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் வடபுலத்தின் உள்ள தீவுகளிலிருந்து மக்கள் வெளியேறிய போதும் யாழ் மாவட்டத்தில் உள்ள தீவுகளில் கணிசமான அளவு மக்கள் மீள்குடியேறியுள்ளதுடன் தொழில்களை செய்வதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.Exif_JPEG_420

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறந்த கடல் தொழில் வளம் கொண்ட இரணைதீவு பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு இரணைதீவின் பெரியதீவில் இருந்து 190 குடும்பங்களும் சின்னத்தீவில் 50 குடும்பங்களும் என 240 குடும்பங்கள் அங்கிருந்து அன்று அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கால்நடைகள் கடற்தொழில் உபகரணங்கள் என்பவற்றையும் கைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் முழங்காவில் பிரதேசத்தின் குறித்த பகுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இரணைமாதா நகர் என்ற கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த 26 வருடங்களாக இரணைதீவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் இரணைதீவு மக்கள் குடியேற்றப்பட்டுள்ள இரணைமாதா நகரில் அந்த மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மின்சார வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இரணைதீவு றோ.க.வித்தியாலயமும் இரணைமாதா நகரில் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.

எவ்வாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் தமது பூர்வீக நிலமான இரணைதீவிற்குச் செல்வதற்கே இப்பகுதி மக்கள் ஆவலாக உள்ளனர்.

நல்லதொரு கடல் வளத்தைக்கொண்ட இரணைதீவு தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.Exif_JPEG_420

இந்த நிலையில் இந்த தீவினை விடுவித்து தமது பூர்வீக நிலங்களில் சென்று வாழ்வதற்கும் அங்கு தங்கி நின்று கடற்தொழில்களை மேற்கொள்வதற்குமான அனுமதிகளை எப்படியாவது பெற்றுத்தாருங்கள் என கடந்த ஆட்சிக்கால அரசாங்கத்திடமும் தற்போதைய நல்லாட்சி அரசிடமும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெறுகின்ற சகல கூட்டங்களிலும் இந்த கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இரணைதீவிற்குச் சென்று தொழில் செய்வதற்கும் அங்கு தங்கி வாழ்வதற்கும் தற்போது 320 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் விருப்பம் தெரிவித்து தமது பதிவுகளையும் மேற்கொண்டுள்ளன.

வட பகுதியில் வளமான கடல் வளம் கொண்ட இடமான இரணைதீவில் எங்களின் பல தலைமுறைகள் எவரிடமும் கையேந்தாமலும் எந்த நிவாரண உதவிகள் இன்றியும் தொழில் செய்து வாழ்ந்தார்கள்.

அதே போன்று வாழும் கடல் வளமும் வல்லமையும் உள்ளது எமது நிலத்தில் எங்களை மீள்குடியேற்றவும் தொழில் செய்யவும் அனுமதிகளை பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

n10