வழியை மறைத்துக்கொண்டு நிற்காதீர்கள் சிறிசேன
– சைமொன் ஜயசிங்க
ஜனாதிபதி இந்த நடவடிக்கையை ஏன் எடுத்தார் என நான் இன்னமும் ஆச்சரியமடைந்துள்ளேன். ஊழல் அரியணை ஏறிய கடந்தஅரசாங்கத்தினை சேர்ந்த வலுவான ஊழல்சக்திகளின் அழுத்தத்தை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட்ட மூன்று அமைப்புகளையும் இவ்வாறு தாக்குவது அர்த்தமற்ற விடயம்.
இந்த ஊழல் கும்பல் அனேகமாக வெளியே காணப்படுகின்றது- (கூட்டு எதிர்க்கட்சிக்குள்ள)அதேவேளை இவர்களில் ஓரு பகுதியினர் சிறிசேனவின் அணிக்குள் காணப்படுகின்றனர், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்குள் ஓளிந்திருக்கின்றனர் என்பதிலும் சந்தேகமில்லை.இவர்கள் அவமானப்படுத்தப்பட்ட அரசகுடும்பத்திற்கு அவசியமான தருணத்தில் கைகொடுக்க தயாராககாத்திருக்கின்றனர்.
ஜனாதிபதியின் இந்த உரை ஏன் அர்த்தமற்றது? குறிப்பிட்ட ஆணைக்குழுக்கள் உரியவிதத்தில் செயற்படவில்லை என ஜனாதிபதி நினைத்தால் அவற்றின் அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்துவதற்கான அதிகாரம் அவரிற்குள்ளது.அந்த ஆணைக்குழுக்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான உரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாமலிருக்கலாம் ( அதற்காக கடவுளிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்) ஆனால் அவர்களுடன் உரையாடுவதற்கான அதிகாரம் அவருக்குள்ளது. அதேபோன்று இந்த ஆணைக்குழுக்களை சேர்ந்தவர்களிற்கு ஜனாதிபதியை செவிமடுக்கவேண்டிய தார்மீககடப்பாடு உள்ளது.
மாறாக இந்த அமைப்புகளை பொதுவெளியில் விளாசித்தள்ளுவது நல்லாட்சி கருத்துருவிற்கு பொருத்தமான விடயமல்ல, தன்னுடைய ஆசிரியர்கள் செயற்படும் விதம் குறித்து அதிபர் அதிருப்தியடைந்தால் அவர் தன்னுடைய ஆசிரியர்களை தாக்குவதற்காக ஊடகங்களிடம் செல்லகூடாது.
மேலும் இந்த ஸ்தாபனங்கள் பிழையான முடிவுகளை எடுக்கின்றன என்றால், ஜனாதிபதி கருதுவது போன்று அவர்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலின் கீழ் இயங்குகின்றனர் என்றால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிவழங்குவதற்கு அனைத்து நீதிமன்றிடமும் வளங்கள் உள்ளன. ஜனாதிபதி இவை அனைத்தையும் நீதித்துறையிடம் விட்டுவிடவேண்டும்,மாறாக அந்த அமைப்பினை கவிழ்ப்பதற்கு சட்டவிரோதமாக முயலகூடாது.
ஜனாதிபதி தனது இந்த உரையின் மூலம் இந்த ஸ்தாபனங்களின் கௌரவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றார், மாறாக அவற்றின் கௌரவத்தை காக்கவேண்டியது அவரின் கடமை. இலங்கை ஜனநாயககுடியரசின் ஜனாதிபதி போன்ற ஓருவர் வெளிப்படையாக தனது கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதியில் ஈடுபடும்போது, அவ்வாறு பாதிப்பை சந்திக்கும் அமைப்பினால் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது.
எதிர்கட்சிகள் ஜனாதிபதியின் கருத்துக்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட ஸ்தாபனத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
ஊழலிற்கு எதிராக செயற்படும் அமைப்புகளை பலவீனப்படுத்த எதிர்கட்சிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஜனாதிபதி தனது உரையின் மூலம் நன்கு பலப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ள விடயங்களிலும் பிழையுள்ளது. ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படை தளபதிகளிற்கு ஏன் விசேட சலுகையை வழங்க விரும்புகின்றார்?நல்லாட்சியில் குறிப்பிடப்படும் சட்டம் ஓழுங்கு என்ற விடயத்திற்குள் இந்த சிறப்புரிமை எவ்வாறு பொருந்தும்?
கோத்தபாய உண்மையிலேயே குற்றவாளியென்றால் நாங்கள் எவ்வாறு அவரிற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க முடியும்? லசந்த மற்றும் தாஜூடீன் கொலைகள் தொடர்பில் கோத்தபாய மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என ஓரு பேச்சிற்கு வைத்துக்கொண்டால் அவர் மீதான விசாரணையை எவ்வாறு நாங்கள் தடுக்க முடியும்? ஓருவர் உண்மையிலேயே சட்டம் உரியவித்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என நேர்மையான அக்கறையை கொண்டிருந்தால் அவர் ஓருவருக்கும் சிறப்புரிமையை, சலுiகையை வழங்க முடியாது.
முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தின கீழ் நீதிஅமைப்பு வெளிப்படையாக மீறப்பட்டது குறித்து சாதாரணபொதுமக்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர்.ஜனவரி 8 ம் திகதி புரட்சி இதன்காரணமாகவே இடம்பெற்றது.சிறிசேன தன்னை ஜனாதிபதியாக்கிய அந்த பிரச்சாரத்திலிருந்து பல்டி அடித்துள்ளார்,
இது மக்களை மோசமாக கைவிட்ட செயல் இல்லையா?
ஜனாதிபதி இவ்வாறான உரையாற்றியதன் மூலம் அரசியல் நாடகமொன்றை ஆடுகின்றார் என கருதுவதே தற்போதுள்ள ஓரேயொரு நம்பிக்கை.எனினும் இது பிளையான நாடாகமாக அமையும் எதிர்மறையான விளைவுகளை கொண்டுவரும், இறுதியில் அவரிற்கே பாதகமாக அமைந்து அவமானத்தை அது தேடித்தரும்.
எது எவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதி நீதிதுறை செயற்பாடுகளில் தலையிடுவதை விட்டுவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களில் கருத்து தெரிவிக்கவேண்டும்,ஆனால் டைலான் தெரிவிப்பது போன்று அவர் குறுக்கே நின்றால,ஏற்கனவே விசாரணைகளில் காணப்படும் மந்தநிலை காரணமாக அதிருப்தியடைந்துள்ள மக்களின் சீற்றத்தினால் அவர் தூக்கியெறியப்படலாம்.




