வவுனியாவில் ஆறாவது நாளாக தொடரும் காணாமல் போன உறவுகளின் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம்
வவுனியாவில் ஆறாவது நாளாக காணாமல் போனோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்பாக ஏ9 வீதியின் ஓரமாக ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார், கொழும்பு மாநாகரசபை முன்னாள் உறுப்பினர் பாஸ்கரா, கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலியகொடவின் மனைவி ஆகியோர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். வேறு எவரும் தமது போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வில்லை எனவும், தமது நியாயமான கோரிக’;கையையும், போராட்டத்தையும் அனைத்து தரப்பினரும் கண்டு கொண்டு அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் எமக்கான தீர்வைப் பெற்றுத் தாருங்கள் எனவும் கண்ணீர் மல்க தாய் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தமது கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று முதல் ஜனாதிபதின் கவனத்தை ஈர்க்கும் தபால் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

N5




