வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகளின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகள் ஆரம்பித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (27.02) தொடர்கிறது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்பாக ஏ9 வீதியின் ஓரமாக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தென்னிலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அவர்களின் மனைவி சந்தியா எக்னலிகொட அவர்களும் சந்தித்து தமது ஆதரவையும் வழங்கியிருந்தார்.
இதேவேளை, கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தமது கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




N5




