வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் அடையாள உண்ணாவிரதம்: ஜனவரி 15 வரை அரசுக்கு காலக்கெடு
வவுனியாவில் இன்று (30.12) காணாமல் போனோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போன மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும் என கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் ஆ.ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்ற போதும் காணாமல் போன எமது பிள்ளைகள், உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாங்கள் நம்பிக்கையோடு இருந்த இந்த அரசாங்கமம் உரிய பதிலை வழங்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றது. இதனால் நாம் இன்று ஓர் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்குள் எமக்கு ஒரு முடிவினை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் எமது பிள்ளைகளைத் தேடி நாம் தினம் தினம் சாவதை விட ஜனரி 20 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதங்கங்களை கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.



N5




