வவுனியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் அதிபரின் விடுதி: எதிர்ப்பு தெரிவித்து பழைய மாணவர்கள் உண்ணாவிரதம்
வவுனியா, நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்குள் அதிபருக்கான விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை பாடசாலையின் வேறு ஒரு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பழைய மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் முன்பாக இன்று காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் பாடசாலைக்கு என ஒதுக்கப்பட்ட குறித்த நிதி திரும்பிச் செல்லா வகையில் வேறு ஒரு இடத்தில் அதிபருக்கான விடுதியை அமைக்க வேண்டும், பாடசாலை மைதானத்திற்குள் விளையாட்டு நிகழ்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடுதி அமைக்கும் வேலைகளை உடனடியாக நிறத்த வேண்டும், நீண்டகாலமாக தெரிவு இன்றி இருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தை நடத்தி நிர்வாகத் தெரிவை மீளச் செய்ய வேண்டும், பழைய மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்று தெரிவு இடம்பெற வேண்டும், மைதானத்திற்குள் விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பழிவாங்கப்படக் கூhது என ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்களுடனும், அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் எதிர்வரும் புதன் கிழமை (12.10) பிற்பகல்’ ஒரு மணிக்கு பாடசாலையில் பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், உயர்தர மாணவர்கள், பெற்றோர்கள், வவுனியா மாவட்ட மாகாணசபை உறப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் கூடி இது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதாகவும், அதுவரை கட்டட நிர்மாண வேலைகளை நிறுத்துவதாகவும் பொலிஸ் அதிகாரி மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
N5







