வவுனியா காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதத்தில் கமராவுடன் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கமராவுடன் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது காணாமல் போன பிள்ளைகள் மற்றும் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் தர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரி இத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இரவிரவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கையில் கமராவுடன் சென்று அம் மக்களையும், அவர்கள் கூறும் கருத்துக்களையும் ஒளிப்பதிவு செய்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. புலனாய்வாளர்களின் இச் செயற்பாடு குறித்து உடகவியலாளர்களும், காணாமல் போனவர்களின் உறவுகளும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

N5




