வவுனியா சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
வவுனியா சிறைச்சாலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் 1ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர்.
அவர்கள் இலங்கை கடற்பரப்பில் எல்லைமீறி மீன்பிடித்ததற்காக மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்து 14 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைந்துள்ளனர். மீனவர்களின் காவல் கடந்த வெள்ளிக் கிழமையோடு முடிவடைந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் 4 வது முறையாக மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அப்போது நீதிபதி ஆசிர்வாதம் அலேக்ஸ் ராஜா காவலை ஜூலை 17ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். அதனால் மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மத்திய, மாநில அரசுகள் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என 14 இராமேஸ்வரம் மீனவர்களும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.




