வவுனியா செட்டிகுளத்தில் யானைகளின் அட்டகாசத்தினால் மீளக்குடியேறிய மக்கள் பெரும் அவதி
வவுனியா செட்டிகுளம் பகுதியில் மீள்குடியேறிய மக்களின் பயன்தரும் மரங்களையும் பயிர் செய்கைகளையும் இரவு வேளைகளில் தினமும் காட்டு யானைகள் அழித்து வருவதுடன் ஒவ்வொரு இரவுகளையும் அச்சத்துடன் கழிக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம், பூசனிப்பிட்டி, வாரிக்குட்டியூர், இரண்டாம் பண்ணை, கிறி;ஸ்தவகுளம், முதலியார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் மாலை 6.00 மணி முதல் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்; காணப்படுகின்றது.
இப்பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் ஊர் மனைக்குள் புகும் காட்டுயானைகள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி தமது வாழ்வாதாரத் தேவைக்காக செய்கை பண்ணப்பட்டுள்ள தென்னை, மா, பலா உள்ளிட்ட பயன்தருமரங்கள் பெருவாரியாக யானைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதனைவிட முகத்தான் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கைகளையும் தினமும் அழித்து வருகின்றன. இவ்வாறு யானைகளின் அட்டகாசத்தால் வடபகுதியில் உழுந்து, பயறு, உள்ளிட்ட உப உணவு உற்பத்தியில் தன்னிறைவைக் கொண்ட இப்பகுதியில் உப உணவுச் செய்கை முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.
குறித்த யானைகள் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு விடப்பட்ட யானைகளாகவே காணப்படுகின்றன எனவும் வீடுகளுக்கு அருகில் இரவு வேளைகளில் வரும் யானைகள் வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை கூட சேதப்படுத்தியும் வருகின்றன.
ஆனால் வெளிச்சங்களை பாச்சி சத்தமிட்டுத் துரத்தும் போதும் அவை அவ்விடங்களை
விட்டடுப் போவதில்லை. இவ்வாறு காட்டுயானைகளின் தொல்லைகளால் இரவு வேளைகளில் வீடுகளில் நின்மதியாக உறங்கமுடியாத நிலை காணப்படுவதுடன் ஒவ்வொரு இரவுகளையும் அச்சத்துடன் கழிக்கவேண்டிய நிலை காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குரங்குகளின் தொல்லைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இவ்வாறு யானைகளினதும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு இப்பகுதி மக்கள் பல்வேறு அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளபோதும் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இவற்றைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது வவுனியா மாவட்டத்தின் காட்டுயானைகளினதும் குரங்குகளினதும் தொல்லை அதிகளவு காணப்படும் பகுதியாக செட்டிகுளம் பிரதேசம் காணப்படுகின்றது.
இவற்றை கட்டுப்படுத்துமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் வவுனியாவில் உள்ளதுடன் இப்பகுதியில் உப அலுவலகம் ஒன்றினை அமைக்கும் போதும் கேட்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.




