வவுனியா செட்டிகுள விவசாய நிலங்களில் தொடர்ந்து காணப்படும் இராணுவ மண் அணைகள்
வவுனியா செட்டிகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் காணப்படும் இராணுவ மண் அணைகளை அகற்றித்தருமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள செட்டிகுளம் முகத்தான்குளம் இரண்டாம் பண்ணை, கிறிஸ்தவகுளம், பழையபுகையிரத நிலையத்தை அண்மித்த பகுதிகளில் கடந்த யுத்த காலத்தில் போடப்பட்ட மண் அணைகள் கைவிடப்பட்ட இராணுவ காவலரண்கள் என்பன காணப்படுகின்றன.
கடந்த 1990ம்ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து மன்னார் மடுமாதா தேவாலயம் இரணைஇலுப்பைக்குளம், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருந்து மீளவும் 1998ம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் செட்டிகுளம் கிறிஸ்தவகுளம், முகத்தான்குளம், இரண்டாம் பண்ணை, ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில இடஙகளில் பொது மக்களின் காணிகளில் கைவிடப்பட்ட நிலையில் மண் மேடுகளாக காணப்படும் இராணுவ காவலரண்களையும் இதேபோன்று பழைய புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் காணப்படும் மண் அணைகளையும் அகற்றித்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




