செய்திகள்

வவுனியா வடக்கின் எல்லையோர கிராமத்தில் மூங்கில் செய்கை

வவுனியா வடக்கு பிரதேசத்தின் எல்லையோர கிராமமான விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் மூங்கில் பயிர் செய்கை நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் இருந்த மக்கள் ஒதியமலைப் படுகொலையைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் அருகில் பரவலடைந்து வந்த சிங்கள குடியேற்றங்கள் காரணமாக யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அக் காணிகளில் தோட்டச் செய்கையில் கூட ஈடுபடவில்லை. இந்நிலையில் இடப்பெயர்வுகள் பலவற்றை சந்தித்த இப்பகுதி மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு பட்டிக்குடியிருப்பு வரை மீள்குடியேறிய போதும் அவர்களது விவசாய நிலங்காளாகிய விண்ணாங்கம்பிட்டி எல்லையோர கிராமம் பற்றைக் காடுகளாக மாறியிருந்தது. அதனை துப்பரவு செய்ய வசதியில்லாத நிலையில் அக்காணிகள் பராமரிப்பு இன்றி தொடர்ந்து இருந்து வந்த நிலையில் தற்போது இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அப்பகுதி மக்களின் காணிகள் துப்பரவு செய்யப்பட்டு அப்பகுதியில் மூங்கில் பயிர் செய்கை செய்வதற்கும் அந்நிறுவனம் உதவிகளை வழங்கியுள்ளது.

அப்பகுதி மக்களின் காணிகளில் மூங்கில்களை பயிரிட்டு அதனுடன் இணைந்த ஊடுபயிர் செய்கை நடவடிக்கைக்கம் ஊக்கமளித்துள்ள குறித்த நிறுவனம் அவ் மூங்கிலைப் கொள்வனவு செய்து அதன் மூலம் மின்சார உற்பத்தியில் ஈடுபடவும் உத்தேசித்துள்ளது. அதனடிப்படையில் முதல்கட்டமாக அப்பகுதியில் 10 ஏக்கர் காணியில் மூங்கில் பயிர் செய்கை நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், மூங்கில் பயிர் செய்கைக்கான உதவிகளை வழங்கும் இந்திய நிறுவனத்தின் பிரதிநிதி ராம் சுப்பிரமணியம் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, குறித்த பயிர்செய்கையை மேற்கொள்ள இந்நிறுவனம் மாகாண சபையிடம் அனுமதி கோரிய போதுடம் கடந்த இரண்டு வருடங்களாக அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

03 02

01

N5