செய்திகள்

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கும் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகம் குருட்டுக்கண்ணை கொண்டிருப்பதாக ஒக்லாந்து நிறுவனம் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் மீண்டும் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ஒக்லாந்து ஆய்வு  நிறுவனம் பொதுமக்களின் காணிகளை மீள அளிப்பதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதனை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு காத்துகொண்டிருக்கின்றனர் என்றும், இராணுவ ஆக்கிரமிப்பு  தொடருகின்றது என்றும் நீதியை பெறுவதில் நிச்சயம் அற்ற தன்மை காணப்படுவதாகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருப்பதுடன் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கும் ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தின் மீது  உண்மையும் நல்லிணக்கமும் அவசியமாக தேவைப்படும் தற்போதைய தருணத்தில் அமேரிக்கா உட்பட  சர்வதேச சமூகத்தின் முக்கிய வகிபாட்டாளர்கள் குருட்டுக்கண்ணை கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது.

‘யுத்தத்தின் நீண்ட நிழல்:யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் நீதிக்கான போராட்டம்’ என்ற ஆய்வு அறிக்கையை கடந்த வருடம் வெளியிட்டிருந்த ஒக்லாந்து நிறுவனத்திடம் இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அமைப்பு ஒன்று தங்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ‘ வீடு திரும்ப காத்துக்கொண்டிருத்தல்: யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில்  உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தொடரும் துன்பங்கள் ‘ என்ற ஆய்வு அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருக்கிறது.  கள ஆய்வு மற்றும் நேர்காணல்கள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்ளக விசாரணை பயனனற்றது என்றும் சுயாதீன சர்வதேச விசாரணை இடம்பெறுவதை அமேரிக்கா உட்பட சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தும் இந்த அறிக்கை சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதையும் சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அழுத்தி உரைத்துள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள சில இடங்களில் கூட எந்தவிதமான உட்கட்டுமான வசதிகளும் இல்லை என்றும் நிலங்கள் பயிற்ச்செகைக்கு உகந்த நிலையில் இல்லை என்றும் கூறும் இந்த அறிக்கை இராணுவம் சில இடங்களில் இருந்து வெளியேறி மக்களுக்கு அந்த இடங்களை கையளித்துள்ள போதிலும் மீண்டும் அந்த இடங்களுக்கு அருகிலேயே முகாம்களை அமைந்துள்ளதாகவும் இது மக்கள் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. இந்த நிலைமை அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பூரில் மட்டுமன்றி வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் காணப்படுவதாக அறிக்கை கோடிடுகிறது.

விசேடமாக சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி துன்பப்படுவது பற்றி இந்த அறிக்கை விசேட கவனம் செலுத்துகிறது. அண்மையில் கடற்ப்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில்  நீர் மற்றும் மலசல கூட வசதிகள் இன்றி மக்கள் படும் துன்பங்களை வெளிக்காட்டும் பல படங்களை அறிக்கை ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

30 வருட கால இடப்பெயர்வின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொருட்டு சகல அரசியல் மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகளை முயற்சித்துப்பார்த்து களைப்படைந்த பின்னரே சர்வதேச நிறுவனமான தம்மை இந்த விடயத்தில் உதவுமாறு இடம்பெயர்ந்த மக்கள் அணுகியதாகவும் இது எந்தளவுக்கு அநீதிகளை நிவர்த்தி செய்வதில் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானவையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் ஒக்லாந்து நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிச்சால் தெரிவித்தார்.

[gview file=”http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Waiting-to-Return-1.pdf”]

Released land in sampoor 1
Released land in sampoor 2 Released land in sampoor

1.சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் கடற்ப்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறியுள்ள மக்கள் குடிசை அமைப்பதற்காக நிலத்தை துப்பரவு செய்கின்றனர். © The Oakland Institute

2.சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் கடற்ப்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறியுள்ள மக்கள் பயன்படுத்தும் தற்காலிக மலசல கூடம். © The Oakland Institute
3. சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் கடற்ப்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறியுள்ள மக்கள் நிர்மூலமான கிணறு ஒன்றில் பாவனைக்கு தண்ணீர் அள்ளுவதற்கு வசதியாக கிணற்றுக்கு குறுக்காக தடிகளை போட்டிருப்பதை காணலாம். © The Oakland Institute