செய்திகள்

வாள் வெட்டு குழுவுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவுக்கும் தொடர்பா ? : சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

வடக்கில் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவுக்கும் தொடர்பு உள்ளதா என நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடத்தப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களினால் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலெதுவும் வழங்காது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
இதன்படி அந்த குழுவுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவுக்குமிடையே உண்மையிலேயே தொடர்புகள் உள்ளதா என பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பான கேள்விகளின் போது ஊடகவியலாளர் ஒருவர் வடக்கில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரியும் குழுவுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அங்குள்ள மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக உங்களின் பதில் என்ன என கேட்டுள்ளார்.
இதன்போது பதிலெதனையும் வழங்காது சிரித்துக்கொண்டே அமைச்சர் அங்கிருந்து எழுந்து வெளியே சென்றார். இவ்வேளையில் ஆமா , இல்லையா என்றாவது பதிலை வழங்குங்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோதும் பதிலெதனையும் வழங்காது ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து அமைச்சர் வெளியேறி சென்றுள்ளார். -(3)