வாழ்விடங்களின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் பரவிப்பாஞ்சான் மக்கள்
பா.ஜதுர்சிகா
தமக்கான சொந்தக்காணிகள் இருந்தபோதும் அவற்றில் மீள்குடியேற அனுமதிக்கப்படாமையினால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்விடங்களின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தங்களை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறி வாழ்வதற்கு அனுமதிக்குமாறு கோரியும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் முள்ளிவாய்க்கால் வரைச் சென்று மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி முதல் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நாற்பத்தி ஓராயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
இந்நிலையில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாமையினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாவட்டத்திலும் மாவட்டத்திற்கு வெளியேயும் வசித்து வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மீள்குடியேறுவதற்கு 748 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
அதாவது பூநகரி இரணைதீவுப்பகுதியில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள குடும்பங்கள் மாற்றிடம் ஒன்றில் குடியேறியுள்ளதால் இந்த பகுதியில் தொழில் அனுமதியையும் தமது சொந்த நிலத்தில் சென்று வாழ்;வதற்;குமான அனுமதிகளை இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை வேம்பொடுகேணி உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இப்பகுதி மக்கள் மீள்குடியமர்விற்காக அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இவை இவ்வாறு இருக்க கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிருஸ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் காணிகள் இராணுவப்பயன்பாட்டில் இருப்பதனால் இக்காணிகளில் அதன் உரிமையாளர்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்படவில்லை.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தில் சுமார் 56 குடும்பங்களுக்கு சொந்தமான 17.2 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்று வரையான சுமார் ஆறு ஆண்டுகளாக தமது காணிகளை விடுவித்து அவற்றில் மீள்குடியேற அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்துள்ளதுடன் பல போராட்டங்களையும் மேற்கொண்டபோதும் இதுவரை அவர்களது நிலம் முழுமையாக விடுவிக்கப்படாத நிலை தொடர்கின்றது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டு முதல் பரவிப்பாஞ்சான் கிராமம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் எவரும் மீள்குடியேற முடியாத நிலையில் காணப்பட்டது.
2015ம் ஆண்டு நல்லாட்சி அரசின் நல்லெண்ண அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிளிநொச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வின்போது பரவிப்பாஞ்சான் கிராமத்தின் ஒரு பகுதி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட பகுதிகள் தவிர 56 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17.2 ஏக்கர் காணிகள்பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இவ்வாறு இராணுவத்தினரின் பயன்பாட்டில் குறித்த காணிகள் இருப்பதனால் 56 குடும்பங்களும் மாவட்டத்திலும் மாவட்டத்திற்கு வெளியிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அரச திணைக்களங்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் என நகரின் பல்வேறு இடங்களில் தொழில் புரியும் அனேகமானவர்களுக்குச் சொந்தமான காணிகளாகவே காணப்படுவதனால் வேறு இடங்களில் தங்கியிருக்கமுடியாத நிலையில் கடந்த ஆறு வருடங்களாக குறித்த மக்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
கிளிநொச்சி நகரில் ஐயாயிரம் ரூபாவிற்கு குறைந்த வாடகையிலும் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குறையாத முற்பணமின்றியும் ஒரு வாடகை வீட்டையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது எல்லோருமே அறிந்த விடயம்.
இந்நிலையில் தமது சொந்த காணிகள் அருகில் இருந்தும் அவை இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமையினால் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஐந்தரை வருடங்களாக நான்கு இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையை வாடகை வீடுகளுக்கே ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்திருக்கின்றன.
இவ்வாறு வாடகை வீடுகளில் பெருந்தொகை பணத்தினை செலவிட்டாலும் நின்மதியாக விரும்பிய மாதிரி குடியிருக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் முன்னைய அரசாங்கத்திடமும் அதன் பின்னரான நல்லாட்சி அரசிடமும் இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க தமது சொந்த நிலத்தைச் சென்று பார்ப்பதற்குக் கூட அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் அதைக்கூட இந்த நல்லாட்சி அரசு செய்யவில்லை என்றும் அதற்கு நல்லாட்சி அரசை ஏற்படுத்தியவர்களும் ஏற்படுத்தித்தரவில்லை என்றும் இப்பகுதி மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அன்மையில் கிளிநொச்சிக்குவிஜயம் செய்தஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைக் கூட்டமைப்பின் அலுவலகமானஅறிவகத்தில் வைத்துச் சந்தித்த பரவிப்பாஞ்சான் பகுதிமக்கள் தமதுகாணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லைஎனத் தெரிவித்திருந்தனர்.
மக்களதுகருத்துக்களைக் கேட்டறிந்த சம்பந்தன் அவர்கள் அந்த மக்களுடன் பரவிப்பாஞ்சான் இராணுவக் கட்டுப்பாட்டில் உயர்பாதுகாப்புவலயமாகவுள்ளமக்களதுகாணிகளுக்குச் சென்றிருந்தார்.
இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பரவிப்பாஞ்சான் பகுதிக்குதிடீரெனச் சென்றபோது அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவத்தினர் எதிர்கட்சித் தலைவரை அப்பகுதிக்குச் செல்ல அனுமதித்தனர்.
தமது காணிகளுக்குச் சென்று தமதுவீடுகளைமிகவும் ஆவலோடுபார்வையிட்டனர். பரவிப்பாஞ்சான் பகுதியில் வைத்துபரவிப்பாஞ்சான் மக்கள் எதிர்கட்சித் தலைவரிடம் தமக்கானசொந்தக் காணிகள், வீடுகள் இருக்கும்போதுதாம் அகதிகளாகஅவலப்படுவதாகவும் தமதுசொந்தக் காணிகளில் தாம் குடியேறிவாழ்வதற்கானநடவடிக்கையைச் செய்யுமாறும் கோரியிருந்தார்கள்.
“நீண்டகாலமாகப் பொறுத்திருந்திருக்கிறீர்கள். மீள்குடியேற்றங்கள் தொடர்பில் தற்போழுது முன்னேற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றது. ஆனாலும் அது போதுமானதாகவில்லை. மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தி உங்களைச் சொந்தக் காணிகளில் விரைவில் குடியேற்றநடவடிக்கைஎடுப்போம்” என்றார்.
பரவிப்பாஞ்சான் மக்களுடன் சென்று விடுவிக்கப்படாத இடங்களை பார்வையிட்ட நிலையில் அதற்குள் சென்றது தொடர்பாக பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றன.
இது இவ்வாறிருக்க நல்லாட்சி அரசினால் யூன் மாதத்திற்கு முன்னர் இந்த காணிகள் விடுவிக்கப்படும் என்ற போதும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இறுதியாக கடந்த வாரம் இப்பகுதி மக்கள் தமது சொந்தக் காணிகளை மீட்டு தாங்கள் குடியேறுவதற்;கான அனுமதியை பெற்றுத்தருமாறு மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இதற்கான பதிலை பதினைந்து நாட்களுக்குள் தருமாறும் தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சொந்த நிலத்தில் சொந்த வீட்டில் வாழ முடியாத நிலையில் வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்த மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசு நல்வழியைக்காட்டும் என்று மக்கள் நம்பியபோதும் அதன் நிலை தொடர்கின்றது.
எனவே இதற்கு அரசியல் வாதிகள் சரியான தீர்வைப்பெற்றுத் தருவதற்கு முழுமையாக உழைக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் நிலைப்பாடாகும்.




