செய்திகள்

விக்கினேஸ்வரனின் உண்மையான எதிரிகள்?

யதீந்திரா
விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணிக்கான மத்திய குழுவை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்கள் ஒரு சிலர் ஊடங்களில் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்துவருகின்றனர். விக்கினேஸ்வரன் ஒரு தனியான கட்சிக்கான அறிவிப்பை செய்த நாளிலிருந்து, அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் ஒரு கேள்வி ஊசலாடிக்கொண்டிருந்தது. இதனை இவர் எவ்வாறு கொண்டுநடத்தப் போகின்றார்? இந்த வயதில் இவரால் இது இயலுமான காரியம்தானா? இதெல்லாம் சரியாக வருமா? இப்படியான கேள்விகளை மனதுக்குள் ஒழித்துக் கொண்டு விக்கினேஸ்வரனிடம் சென்றவர்களும் உண்டு. ஆனால், விக்கினேஸ்வரன் இந்த வயதிலும் மனஉறுதியுடன் இப்படியான ஒரு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.

விக்கினேஸ்வரனுக்கு தனது வயதும் தெரியும், தன்னால் செயற்படக் கூடிய எல்லையும் தெரியும். தன்னையறிந்தே, அவர் இவ்வாறானதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டிய பிறிதொரு விடயம் – விக்கினேஸ்வரன் எவருமே எதிர்பாராத வகையில் இவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. அவருக்கு நெருக்கமானவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியிருந்தவர்கள் முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையாக இயங்கியவர்கள் மேலும், அவரது தலைமையை எதிர்பார்த்து காத்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான், விக்கினேஸ்வரன் தனது கட்சியை பகிரங்கப்படுத்தியிருந்தார். அவர் கட்சியை அறிவித்தது, பேரவைக்கு தெரியாதென்று, ஒரு சிலர் கூறுவதை கேட்கமுடிகிறது. ஆனால் இது ஒரு டெக்னிக்கல் பிரச்சினையே தவிர பாரதூரமான பிரச்சினையில்லை. பேரவையும் சரி, விக்கினேஸ்வரனது தலைமையை விரும்பியவர்களும் சரி, அவரிடமிருந்து இவ்வாறானதொரு முடிவைத்தான் எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைத்தான் அவரும் செய்திருக்கிறார்.

அவ்வாறாயின் எங்கு பிரச்சினை ஏற்பட்டது? விக்கினேஸ்வரன் தலைமை தாங்க வேண்டுமென்று விரும்பிய ஒவ்வொருவரும், பேரவை உட்பட, அவர் இப்படித்தான் தலைமை தாங்க வேண்டுமென்று தங்களுக்குள் ஒரு சட்டகத்தை வைத்திருந்தனர். அந்த சட்டகத்திற்குள் விக்கினேஸ்வரன் அகப்படாத போதுதான், விக்கினேஸ்வரனின் பயணம் தொடர்பில் சலசலப்புக்கள் ஏற்பட்டன. அது இன்னும் ஓயவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான், தமிழ் மக்கள் கூட்டணிக்கான மத்திய குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பிலும் சலசலப்புக்கள் உண்டு. விக்கினேஸ்வரன் புரட்சிகர ஸ்தாபனம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முற்படுகின்றார். அதாவது தேர்தல் அரசியலை எதிர்கொள்வதற்கு அவர் ஆளணி ஒன்றை தயார் செய்கிறார். இப்படியான சந்தர்ப்பங்களில் சலசலப்புக்கள் ஏற்படுவது இயல்பே. அதனை சிலர் ஊதிப் பெருப்பித்து, அதன் மூலம் விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்தலாம் என்றும் எண்ணலாம். ஒரு அரசியல் கட்சியை கட்டுகின்ற போது, இவைகள் எல்லாம் எதிர்பார்க்கக் கூடியவைகள்தான். ஆனால் இப்போது விக்கினேஸ்வரனுக்கு முன்னாலுள்ள பிரச்சினை வேறு. அதாவது, ஒரு அரசியல் கட்சியின் இயக்குனராக, தனக்கு முன்னாலுள்ள சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்? சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர் தனக்கு முன்னாலுள்ள சவால்களை அவர் இனம்காண வேண்டியிருக்கிறது.

wigneswaran

அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் விக்கினேஸ்வரன் கூட்டமைப்பை உடைக்க முயற்சிக்கவில்லை என்றவாறு கூறியிருந்தார். உண்மையில் இவ்வாறான கருத்துக்களை அவர் தொடர்ந்தும் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை ஏனெனில், கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை பிழையானது என்னும் கருத்தின் அடிப்படையில்தான், விக்கினேஸ்வரன் ஒரு தனியான வழியில் செல்கிறார். ஒன்று பிழை என்றால் அதன் உடைவு அல்லது சிதைவு தொடர்பில் நாட்டம்கொள்ள வேண்டியதில்லை. விக்கினேஸ்வரனுக்கு முன்னாலுள்ள சவால் கூட்டமைப்பு அல்ல, மாறாக மாற்று தலைமையொன்று தேவை என்று கூறி, விக்கினேஸ்வரனை வலிந்து அழைத்துவிட்டு, இப்போது அதனை பலவீனப்படுத்த முற்படுபவர்கள்தான் அந்த சவால். கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை தவறென்று நிரூபிக்க வேண்டுமானால், கூட்டமைப்பை விடவும் அல்ல அதற்கு சமாந்தரமான மக்கள் ஆதரவு விக்கினேஸ்வரனுக்கு இருக்கிறது என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க வேண்டுமாயின், கூட்டமைப்பின் வாக்குவங்கியை பிளக்க வேண்டும். எனவே விக்கினேஸ்வரன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரது அரசியல் பயணத்தின் இலக்கு, கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதுதான். ஆனால் அந்த பயணத்தில், தன்னுடன் நிற்பார் என்று எதிர்பார்த்திருந்த கஜேந்திரகுமாரோ, ஆரம்பத்திலிருந்தே, விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுவருகின்றார். விக்கினேஸ்வரன் தனக்கான கட்சியின் பெயரை வெளிப்படுத்திய காலத்திலிருந்து, அவரை பலவீனப்படுத்துவதில் முன்னின்று செயற்படுபவராக கஜனே இருக்கிறார். அந்த வகையில் கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு வலுவான கூட்டு உருவாகுவதற்கு தற்போதிருக்கும் பிரதான தடையே கஜேந்திரகுமார்தான்.

ஆரம்பத்திலிருந்தே விக்கினேஸ்வரனது அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தும் வகையில், பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. இதில் பிரதானமானது சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதானது. சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியாவின் (றோ) கைக் கூலியென்றும், அவ்வாறான ஒருவரோடு விக்கினேஸ்வரன் நிற்பாரானால், அவருடன் தாம் இணைய முடியாதென்றும் கஜன் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் கூட, கூட்டமைப்பு இந்தியாவின் அடிவருடியாக செயற்படுவதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தியாவின் கைக்கூலியாக செயற்படுதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொய் கூறிவருவதாக குறிப்பிடும் ஒரு சந்தர்பத்தில்தான், கூட்டமைப்பு இந்தியாவின் அடிவருடியாக தொழிற்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு பொய் கூறுவதாக, சுரேஸ் பிரேமச்சந்திரன் கைக் கூலியாக தொழிற்படுவதாக கூறிவரும் கஜேந்திரகுமார் கூறும் உண்மை என்ன?
தமிழ் மக்கள் பேரவையினால் புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு இரு கட்சிகளும் விளக்கம் அளித்திருந்தன. சுரேஸ் பிரேமச்சந்திரன் சில கேள்விகளை முன்வைத்திருந்தார். சித்தார்த்தன் சில கேள்விகளை முன்வைத்திருந்தார். முக்கியமாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கட்சிக் கொள்கை என்ன? ஏன் இன்றுவரை காங்கிரசின் யாப்பை கஜேந்திரகுமார் மாற்றவில்லை? தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயரில் மக்களிடம் சென்று வாக்குகளை கேட்கும் அவர், ஏன் அதனை ஒரு கட்சியாக பதிவு செய்யவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா? இப்படியான கேள்விகளை சித்தார்த்தன் எழுப்பியிருந்தார். ஆனால் இன்றுவரை கஜேந்திருகுமாரோ, குறித்த கேள்விகள் எதற்கும் இதுவரை பதிலளிக்கவில்லை. கட்சிகளிடம் விளக்கம் கேட்ட பேரவையும் அதனை தொடரவில்லை. ஏன்?