செய்திகள்

விக்கினேஸ்வரன் அடுத்து என்ன செய்யப் போகிறார்…?

ருத்திரன்-

தமிழ் மக்கள் மத்தியிலும், தென்னிலங்கையும் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியிருக்கிறது வடமாகாண சபை விவகாரம். சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் கூட இதை கூர்ந்து அவதானித்தும் வருகின்றனர். இந்நிலையில் வடமாகாண சபை விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் முதலமைச்சர் கட்சி சார் நிலையில் இருந்து விலகி மக்கள் நலன்சார்ந்ததாக ஒரு நீதிபதியாக தனது முடிவை அறிவித்திருந்தார். சுய ஒழுக்கம், நேர்மை என்பவற்றை கொண்ட ஒரு நீதிபதி என்ற மனநிலையில் இருந்து மாறாதவராகவே அவர் இன்றும் உள்ளார். அதன்படியே செயற்பட்டும் இருக்கிறார். தற்போதும் செயற்பட்டு வருகிறார். நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அந்த விவகாரத்தை கையாண்ட விதம் அவர்களிடத்திலும் அரசியல் முதிர்ச்சி இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான தலைமையாக சில பத்தி எழுத்தாளர்களும், மக்களும் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களையே கூறி வந்திருந்தனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நீதிபதியாக அழைத்து வரப்பட்ட முதலமைச்சர் மக்கள் நலன்சார்ந்து அவர்களின் உரிமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் கட்டுக்குள் அடங்காது தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் கூட்டமைப்பை உடைத்து புதிய தலைமையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. தற்போது தமிழரசுக் கட்சியின் நகர்வுகள் அவருக்கு புதிய தலைமைக்கான ஒரு அவசியத்தை வலிந்து திணித்திருக்கிறது. அதை முதலமைச்சர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு.

வடக்கு மாகாண சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களால் அரச கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தைப் பொறுத்தவரை எது நடந்தாலும் முதலமைச்சரே வெற்றி பெறப் போகிறார். தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற மாகாணசபையாக இருந்த வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையடுத்து தமிழரசுக் கட்சி தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து மேற்கொண்ட நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் முதல்வரை அகற்றுவதற்கான முயற்சி இன்று முதலமைச்சருக்கான ஒரு மக்கள் அலையை உருவாக்கியிருக்கிறது. முதலமைச்சரை தலைவராக கோசம் எழுப்பி, இளைஞர்களும், பொது மக்களும் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர். இது முதலமைச்சருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. தனது நடவடிக்கைகள் மக்கள் நலன்சார்ந்து தான் அமைந்திருக்கின்றது என்ற மதனவுறுதியை கொடுத்திருக்கிறது.

தற்போதுள்ள எண்ணிக்கைகளின் நிலவரப்படி முதலமைச்சருக்கு எதிரான அணியானது அரசு தரப்பு மற்றும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான தரப்புக்களோடு கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே விக்கினேஸ்வரனை கவிழ்க்கலாம் என்ற நிலை தோன்றியிருக்கிறது. அங்கே ஒரு கொள்கைப் பிரச்சினை ஏற்படும். முதல்வரைக் கவிழ்ப்பதற்காக கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கின்ற எதிரிகளோடு கூட்டுச் சேர்வதா, இல்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கும். கட்சி சார் நிலையில் சிந்திக்காது நீதியை நிலைநாட்ட முற்பட்டவரை நீக்கியதாகவே அது அமையும். இவ்வாறு கொள்கையைக் கைவிட்டு கூட்டுச் சேர்ந்தாலும் அது ஒரு சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கும். எனவே கொள்கை ரீதியாகப் பார்த்தால் அந்த சறுக்கல் உரு தோல்விதான். அதாவது வென்றாலும் அது ஒரு தோல்விதான்.

அதே சமயம் வாக்கெடுப்பில் விக்கினேஸ்வரன் பெரும்பான்மையை நிரூபித்தால் அதுவும் தோல்விதான். அதன் பின் விக்கினேஸ்வரன் மாகாணசபைக்குள் பலமடைந்து விடுவார். அதனால் விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரை இப்போதுள்ள நெருக்கடிகளை அவர் வெற்றி கொண்டாலும் அது வெற்றிதான். அதில் அவர் தோற்றாலும் வெற்றிதான்.

இந்த நிலையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமாக இருந்தால் அவர் முன் இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று நீதிபதியாக அரசியலுக்குள் வந்தது போன்று மீண்டும் அவ்வாறான ஒரு ஓழுக்கத்துடன் நீதிபதியாகவே வீட்டுக்குச் சென்று அமைதியாக இருப்பது. மற்றது, தன்னை சீண்டி பார்த்தவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கதாகவும், தம் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்காகவும், கூட்டமைப்பின் தலைமை மீது குறிப்பாக தமிழரசுக் கட்சி மீது அதிருப்தியடைந்து புதிய தலைமைக்காக காத்திருக்கும் மக்களுக்கு புதிய தலைமைத்துவததை கொடுத்து அம் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் அவர்களை வழிநடத்துவது. இதில் எது நடந்தாலும் முதலமைச்சரைப் பொறுத்தவரை வெற்றியே. ஆனால் மக்களைப் பொறுத்தவரை அவர் அந்த மக்களுக்காக தொடர்ந்தும் உறுதியாக அரசியல் தலைமைத்துவத்தை கொடுப்பதே அவர்களது விருப்பமாக அமையும்.

அதேபோல், நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிவற்றுடன் இணைந்து ஆட்சியமைத்து தமிழரசுக் கட்சிக்கான ஒரு மாற்று அணி உருவாகும். இது தமிழரசுக் கட்சிக்கு அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். மறுபுறம் ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழரசுக் கட்சி மீளப் பெறுமாக இருந்தால் கூட முதலமைச்சரின் எழுச்சிக்கு பயந்து அவருக்கு கட்டுப்பட்டே தமிழரசுக் கட்சி அதனை மீளப்பெற்றதாக அமையும். ஆக மொத்தத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையானதும், அவசரத்தில் எடுக்கப்பட்டதுமான ஒரு தவறான முடிவு இன்று முதலமைச்சருக்கு வாய்ப்பாக மாறியிருக்கிறது.

நான்கு கட்சிகளின் கூட்டாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், தன்னை ஒரு தேசியத் தலைவராகவும் கருதும் இரா.சம்மந்தன் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியைக் கூட கட்டுப்படுத்த அல்லது வழிக்கு கொண்டு வரமுடியாதவராகவே உள்ளார். இந்த விவகாரத்தை சமரசமாக முடிப்பதற்கு பங்காளிக்கட்சித் தலைவர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் இரா.சம்மந்தன் அவர்களின் கருத்தையும் மீறி தமிழரசுக் கட்சியின் தவைரும் சில உறுப்பினர்களும் செயற்படுவதாகவே கூறப்படுகின்றது. இந்த நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் பலம் குறித்தும் அரசியல் சாணக்கியம் குறித்தும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இவ்வாறான நிலமையே வடக்கு முதலமைச்சரை இன்று உயர்நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. மக்கள் அவர் பின்னால் செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறது. தன்பக்கம் வீசும் காற்றை வடக்கு முதலமைச்சர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.