விக்கினேஸ்வரன் தொடர்பான விவாதங்கள்?
யதீந்திரா
கடந்த பத்தியில் தமிழ்த் தேசியத் தலைமை ஒன்றின் தேவை தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி தனது முகநூலில், மிகவும் அனுபவம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பதிவிட்டிருந்தார். ஆழமான கட்டுரைகளை இரவிலும் சாதாரமான கட்டுரைகளை பகலிலும் வாசிக்கும் அந்த மூத்த பத்திரிகையாளரை பொறுத்தவரையில் எனது கட்டுரைகள் எப்போதுமே பகலில் வாசிக்கக் கூடிய ஒன்றுதான். பகலிலாவது வாசிக்கிறார்களே அந்தளவில் மகிழ்சிதான். எனது கட்டுரையை வாசித்த போது ஹைபிரைட் என்னும் சொல் நினைவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் ‘ஹைபிரைட் நீதிமன்றம்;’ என்னும் சொல் இலங்கைக்கு அறிமுகமாவதற்கு முன்னரே ஹைபிரைட் என்னும் சொற்பிரயோகம் கார் ஓடுபவர்களின் மத்தியில் நன்கு பிரபலமாகியிருந்தது. பின்னர்தான் அது அரசியலுக்கு அறிமுகமாகியது. நான் மிதவாதிகளால் தனித்து அரசியலை கையாள முடியாமை பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் விவாதித்திருந்தேன். உண்மையில் மிதவாதிகளின் தோல்வியால்தான், ஆயுத விடுதலை இயக்கங்கள் தோற்றம்பெற்றன என்பதை அந்த பத்திரிகையாளரும் நன்கறிவார். கூட்டமைப்பு தற்போதும் அப்படித்தானே இருக்கிறது. இதில் புதிதாக ஒன்றுமில்லையே – குழப்பம்தானே மிஞ்சுகிறது. இதுதான் சிலரது புரிதல் என்றால், அதற்கு பதில் இதுதான் – ஆம் கூட்டமைப்பு அப்படித்தான் இருக்கிறது ஆனால் அதற்கென்று ஒரு வலுவான கட்டமைப்பு இருக்கிறதா? அப்படியொரு கட்டமைப்பு இருந்திருந்;தால் எந்தக் கட்சி பெரிதென்னும், விவாதங்கள் அவர்களுக்குள் மூண்டிருக்குமா? எனவே அவ்வாறான முரண்பாடுகளை தவிர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வலுவான தேசியத் தலைமையாக அது மாற்றப்பட வேண்டும் என்பதே எனது வாதமாக இருந்தது. இப்போதும் இந்தப் பத்தியின் நிலைப்பாடு அதுதான். ஆனால் நான் இருக்கும் வரையில் அனுபவித்துவிட்டுப் போவோம், அதன் பின்னர் நடப்பதுபற்றி எனக்கென்ன கவலை என்று, ஒரு தலைவர் சிந்திப்பாராக இருந்தால், அவ்வாறான ஒரு தலைமைத்துவம் பற்;றி விவாதிப்பதில் பொருளில்லைதான்.
அன்மைக்காலமாக புதிய தலைமைத்துவம் தொடர்பில் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. வடக்கில் இது தொடர்பில் ஆங்காங்கே சில உரையாடல்களும் நடக்கின்றன. இதனை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி ஒரு பெயரை முன்வைத்தே பேசிவருகின்றனர். அது வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன். அவர், சம்பந்தன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரையில் அவ்வாறானதொரு முடிவை எடுக்கமாட்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ – இல்லை அவர் ஒரு கட்டத்தில் நிச்சயம் வருவார் என்கிறார்கள். ஆனால் அன்மைக்காலத்தில் ஒரு புதிய தலைமைக்கான விவாதம் உருவாக ஏதோவொரு வகையில் விக்கினேஸ்வரனே காரணமாக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. அவர் அப்படியொரு நிலையில் நோக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவரை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டமை. இரண்டு சம்பந்தன் – சுமந்திரன் தரப்பின் தலைமையின் மீதான அதிருப்தி அதிகரித்துவருவது – இந்த அதிருப்தியை அரசியலாக்குவதற்கு மக்கள் அபிமானத்தை பெற்றிருக்கும் ஒருவர் தேவை – அவ்வாறான தகுதிநிலை தற்போதைய சூழலில் விக்கினேஸ்வரனுக்குத்தான் உண்டு என்று சிலர் நம்புகின்றனர். வடக்கு நிலைமையை பொறுத்தவரையில் அதில் உண்மையுண்டு.
வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் விக்கினேஸ்வரன் தொடர்பில் ஒரு அபிப்பிராயம் இருப்பது உண்மைதான். அவ்வாறான அபிப்பிராயங்களை வெற்றிகொள்வதற்காக விக்கினேஸ்வரன் ஒன்றும் கடினமாக உழைக்கவில்லை. அவர் செய்ததெல்லாம் ஒன்றுதான். அதாவது, ஆரம்பத்தில் அவர் தொடர்பில் நிலவிய அபிப்பிராயங்களுக்கு மாறாக அவர் நடந்து கொண்டார். அவரது அனுகுமுறைகள் அவரை திடிரென்று மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய ஒருவராக உருமாற்றியது. அதன் பின்னர் அதனை பேணிப் பாதுகாக்கும் வகையிலேயே அவர் செயற்பட்டு வருகின்றார்.
அவர் தொடர்பில் ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் பேசிய பலரும் தற்போது அவரை எதிர்க்கின்றனர். இதில் சிங்களவர்களும் உண்டு தமிழர்களும் உண்டு. சிங்களவர்கள் அவரிடம் எதிர்பார்த்தது வேறு. தயான் ஜெயதிலகவின் வார்த்தையில் கூறுவதானால் அவர் கூட்டமைப்பிற்கான ஒரு கதிர்காமாகரா இருப்பார் என்பதே கொழும்பின் எதிர்பார்ப்பாக இருந்தது.- அவர் தமிழ் அரசியல் ஒரு மென்சக்தியாக இருப்பார் – சம்பந்தன், விக்கினேஸ்வரன், சுமந்திரன் ஆகிய மூவரும் இணைந்து தமிழ் அரசியலுக்கு ஒரு புதிய முகத்தை வழங்குவார்கள் என்றெல்லாம் தயான் சிலாகித்திருந்தார். தயான் ஜயதிலக போன்ற ஒருவர் தமிழ் அரசியல்; வாதிகளை சிலாகிக்கின்றார் என்;றால், அதன் உள்நோக்கம் நிச்சயமாக தமிழ் மக்கள் மீதான ஆதரவின் வெளிப்பாடல்ல மாறாக தமிழர்கள், சிங்கள ஆளுகையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. விக்கினேஸ்வரன் அப்படியான ஒருவராக இருப்பார் என்பதே தயான் போன்றவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது நிகழவில்லை. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய போது, முன்னர் விக்கினேஸ்வரனை புகழ்ந்த தயான் ஜெயதிலகவே பின்னர் ‘இனப்படுகொலை நீதிபதி’ என்று வசைபாடினார். ஆனால் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகளோ தமிழ் சூழலில் அவருக்கான ஆதரவாளர்களை பெருக்கியது. முன்னர் எதிர்த்தவர்கள் அவரை ஆதரிக்கத் தலைப்பட்டனர். ஆனால் அவர் சம்பந்தனோடு நிக்க வேண்டும் என்று விரும்பியவர்களோ முகம் சுழித்தனர். அவ்வாறு முகம் சுழித்தவர்கள் இப்போதும் அதனை தொடர்கின்றனர். இங்கு விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் விக்கினேஸ்வரன் மீதான ஆதரவும் எதிர்ப்பும் அவர் எப்படியிருந்தால் நல்லதென்னும் அபிப்பிராயங்களின் விழைவாகும். ஆனால் விக்கினேஸ்வரன் ஏன் தனது நிலைப்பாடுகளை மாற்றியமைத்தார்? அது அவரது புரிதலிலிருந்து வந்ததா அல்லது வடக்கின் அரசியல் சூழல் அவரை மாற்றியதா? விக்கினேஸ்வரன் மட்டுமல்ல எவர் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் கதிரையில் அமர்ந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகுமா? உண்மையில் விக்கினேஸ்வரன், அரசியலில் பிரவேசிக்கும் போது இப்படியிருந்திருக்கவில்லை. சம்பந்தனை விடவும் தன்னை அதிகம் மிதவாதியாக நிரூபிக்கும் வகையிலேயே, அவரது பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் அமைந்திருந்தன. ஆனால் வடக்கு நிலைமைகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தின் சிந்தனைகள் ஆகியவற்றை உற்றுநோக்கிய போது அவரது நிலைப்பாடுகள் மாற்றமடையத் தொடங்கியது. இதுதான் விக்கினேஸ்வரனது சிந்தனைகள் மாற்றமடைந்ததன் பின்னணி.

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது நம்பிக்கையை வெற்றிகொண்டிருக்கும் ஒரு விக்கினேஸ்வரன் இருக்கிறார். அந்த விக்கினேஸ்வரன் சிலர் எதிர்பார்ப்பது போன்று புதிய தலைமைத்துவம் ஒன்றை வழங்க முன்வருவாரா? இதற்கு ஆம் என்றும் பதிலளிக்க முடியாது – இல்லையென்றும் பதலளிக்க முடியாது. எனெனில் ஆரம்பத்தில் இருந்த விக்கினேஸ்வரன் தற்போது இல்லையென்னும் போது, நாளைய விக்கினேஸ்வரன் எவ்வாறு இருப்பார் என்பதை நம்மால் எவ்வாறு கணிப்பிட முடியும்? அரசியல் ஆய்வுகள் என்பவை ஊகங்கள் மட்டுமே! இவ்வாறான பத்திகள் என்பவை, கிடைக்கும் தகவல்களுடன் ஒருவரது சுய அவதானங்களையும் சேர்க்கும் ஒரு தொகுப்பாக்க முயற்சியாகும். இவைகள் எவையும் முடிந்த முடிபுகள் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அதாவது, ஒரு வலுவான மாற்று அணியொன்று இல்லையென்றால், மீளவும் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவு கூட்டமைப்பு மட்டுமே. இதில் சம்பந்தன் சுமந்திரனின் திறமையென்று ஒன்றுமில்லை. மற்றும்படி சம்பந்தன் அடிப்படையிலேயே ஒரு அரசியல்; தந்திரோபாயவாதியுமல்ல.
இந்த இடத்தில் பலரும் பார்க்கத் தவறுகின்ற ஒரு விடயமுண்டு. இன்றும் சம்பந்தன் நெருக்கடியின்றி இருப்பதற்கு மாற்று அணியொன்றிற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள்தான் காரணம். இதில் தமிழ் மக்கள் பேரவைக்கு பிரதான பங்குண்டு. கூட்டமைப்பின் மீதான குறிப்பாக சம்பந்தன் மீதான அதிருப்திகள் அதிகரித்துவந்த சூழலில்தான், தமிழ் மக்கள் பேரவை நம்பிக்கையுடன் நோக்கப்பட்டது. ஆனால் பேரவையோ ஒரு தீர்வாலோசனையுடனும் இரண்டு எழுக தமிழுடனுடம் தனது செயற்பாடுகளை முடக்கிக்கொண்டது. தமிழ் மக்கள் மத்தியில் மேலெழுந்துவந்த அதிருப்திகளை ஒரு அரசியல் சக்;தியாக திரட்டியெடுப்பதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் கொண்டிருந்த பேரவை, இறுதியில் அனைவரது உழைப்புக்களையும் விழலுக்கு இறைத்த நீராக்கியது. பேரவையை நம்பி களத்தில் இறங்கிய பலரும் போக்கிடமின்றி இருக்கின்றனர். இதனை பிறிதொரு வகையில் நோக்கினால் பேரவை இறுதியில் சம்பந்தனுக்கே உதவிபுரிந்திருக்கிறது.
ஆரம்பத்தில், பேரவையுடன் மூன்று அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதும் அதனுடன் விக்கினேஸ்வரனும் இணைந்திருப்பது போன்ற விடயங்களால்;, தமிழரசு கட்சி கலக்கமடைந்திருந்;தது உண்மைதான். அதனை அவர்கள் வெளியில் காண்பிக்காது விட்டாலும் கூட, ஆனால் தற்போது அந்தக் கவலையிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டனர். இல்லாவிட்டால் இப்படியொரு உரையாடல் அவர்கள் மத்தியில் இடம்பெற்றிருக்காது. அன்மையில் தமிழரசு கட்சியில் சக்திவாய்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். நாங்கள் 2010இல் கஜேந்திரகுமாரை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றி தோற்கடித்தோம். 2015இல் சுரேஸ் பிறேமச்சந்திரனை தோற்கடித்து அவரது கட்சியை பலவீனப்படுத்தினோம். இதே போன்று 2020 சித்தார்த்தனை தோற்கடித்து அனுப்புவோம். அதன் பிறகு கூட்டமைப்பு பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது? இடையில் ஒருவர் குறிக்கிட்டு அப்படியானால் அடைக்கலநாதன்? ஆடைக்கலநாதனா! அவர் எந்தக் கட்சி? என்று அந்;தப் பாராளுமன்ற உறுப்பினர் பகிடியாக கேட்டாராம். இந்த உரையாடலில் தமிழரசு கட்சியின் துனிச்சல் தெரிகிறது. அவ்வாறாயின் சிலர் நினைத்தால் தேர்தல்;களில் மக்கள் செல்;வாக்கு இருந்தாலும் கூட வெற்றிபெற முடியாதா? இதற்கு பல அர்த்தங்கள் உண்டல்லவா! இந்த வகையில் பார்த்தால் இப்போதும் சம்பந்தன்தான் பலமாக இருக்கிறார் என்பதில் ஜயமில்லை. ஆனால் இந்த விடயங்கள் அனைத்தையும் கூட்டிக் கழித்து பார்த்தால் இவைகள் அனைத்தும் அரசியல் வாதிகளின் வெற்றி தோல்வி தொடர்பானதாகும். அவ்வாறாயின் மக்களின் வெற்றி?




