செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் எதனையும் செய்ய வேண்டாம்: அதிகாரிகளுக்கு ரணில் பணிப்பு

வட மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அறிவித்தே மேற்கொள்ளுமாறும் அவருக்கு அறிவிக்காது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் தற்செயலாக சந்தித்த போது நேரில் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது ;

வட மாகாணத்தில் தேவைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் கொழும்பில் திறைசேரி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வந்திருந்தார். இந்தக் கூட்டம் நடைபெறும் இடத்துக்குப் பதிலாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றுவிட்டார்.

இவ்வேளையில் அவ்விடத்திற்கு, அமைச்சரவைக் கூட்டத்திற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தார். இந்த நிலையில் பிரதமரும் முதலமைச்சரும் அந்த இடத்தில் தற்செயலாக சந்தித்த போது சுகநலன் விசாரித்துக் கொண்டதுடன், பிரதமர் முதலமைச்சரிடம் சில முக்கிய விடயங்களை தெரிவித்துமுள்ளார்.

வட மாகாணம் சம்பந்தமான சகல நடவடிக்கைகளையும் முதலமைச்சருக்கு அறிவித்தே அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென தான் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நெறிப்படுத்தியுள்ளதாக கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரைவில் சந்திப்புகளை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெறும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் தங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தாது வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டாமெனவும் இவ்வாறு நடவடிக்கைகளை தங்களுக்குத் தெரியாது முன்னெடுக்கும் போது தாங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், வடக்கில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் எந்த நடவடிக்கையாயினும் அவற்றை தங்களுடன் கலந்து பேசி மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்தடுத்து கடிதங்கள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் முதலமைச்சரை தற்செயலாக சந்தித்த பிரதமர், வடக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவை தொடர்பாக முதலமைச்சருக்கு அறிவிக்கப்படாது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓரிரு நிமிடங்களே இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த தற்செயலான சந்திப்பில் முதலமைச்சர் கடிதம் மூலம் வலியுறுத்திய பல விடயங்களுக்கு பிரதமர் பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.
-06