வித்தியா தொடக்கம் ஹரிஸ்ணவி வரை தொடரும் சம்பவங்கள்: விடுதலைப் புலிகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்துள்ளது!
-கே.வசந்தன்-
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் 7 ஆண்டுகளாக அபிவிருத்தி இடம்பெற்று வந்தாலும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் கலாசார சிதைப்புப்புக்கள் மிகவும் சூட்சுமான முறையில் இடம்பெற்று வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே போதைப்பொருள் பாவனை, கலாசார அடையாளங்கள் அழிக்கப்படுதல், சிறுவர் – பெண்கள் மீதான வன்புனர்வுச் சம்பவங்கள், வாள்வெட்டு சம்பவங்கள் என அது நீண்டு கொண்டே செல்கின்றது. இந்த நிலையின் உச்சமாகவே வித்தியா, சரண்யா, எள்ளுக்காட்டு சிறுமி, ஹரிஸ்ணவி என்ற மாணவிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடு காரணமாக இந்தச் சம்பவங்கள் பெரியளவில் இடம்பெறவில்லை. நிர்வாக, கலாசார ரீதியாக விடுதலைப் புலிகள் இறுக்கமான கட்டமைப்புக்களுடனேயே இருந்தனர். இதனை யாரும் மறுத்துவிடமுடியாது. இதன் காரணமாகவே இன்று சாதாராண பொது மக்கள் தொடக்கம் மாணவர்கள் வரை ‘இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா’ என கூறும் நிலை உருவாகியிருக்கிறது.
யுத்த காலத்தில் படைபல ரீதியாக மட்டுமன்றி நிர்வாக ரீதியாகவும் சிறந்த கட்டமைப்புக்களை விடுதலைப்புலிகள் பேணியிருந்தனர். நிர்வாகத்தை மேற்கொள்ள அரசியல் துறை, காவல் துறை, நிர்வாக சேவை என்பவற்றுடன் நீதிமன்றங்களும் செயற்பட்டன. இதனூடாக சமூகம் சார் பல பிரைச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகள் பல வழங்கப்பட்டமையால் இறுக்கமுடைய கட்டமைப்பாக அது பேணப்பட்டது. வடபகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபானசாலைகள், கலாசாரத்தை சீரழிக்கும் திரைப்படங்களுக்கு தடை என சில கட்டுப்பாடுகள் இருந்தன. போதைவஸ்து பாவனை, வன்புனர்வு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இதனால் அவ்வாறான ஒரு குற்றத்தை செய்வதற்கு அஞ்சும் நிலை காணப்பட்டது. ஆனால் 2009 மே மாதத்திற்கு பின்னர் தமிழர் கலாசாரம் வடக்கில் எங்கு நோக்கிச் செல்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. இது விதியா..? அல்லது சதியா..? என முகம் சுழிக்க வைக்கிறது.
பாடசாலைகள் மற்றும் மாணவர்களை இலக்கு வைத்து பரவலாக போதைப்பொருள் விற்பனை, பாவனை அதிகரித்து வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் கடல் வழியாக கொண்டு வரப்படுகின்ற கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டும் வருகிறது. யுத்தத்தை முடித்த கடற்படை கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது அவர்களது கண்ணுக்கு தெரியாது கடல் வழியாக எவ்வாறு போதைப்பொருட்கள் இலங்கைக்கு வர முடியும் என்ற சந்தேகம் எழுகின்றது. அவர்களே இதற்கு ஊக்குவிக்கின்றார்களா அல்லது கடற்படை பலவீனமானதாக இருக்கின்றதா என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. வடபகுதியில் பரவலாக கஞ்சா மட்மன்றி பாபுல், மாபா போன்ற பெயர்களிலும் போதைப் பொருட்கள் தாராளாமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை இயங்கும் இடங்கள் பல சமூக அமைப்புக்களால் அடையாளங் காட்டப்பட்டும் அதை முழுமையாக அகற்றுவதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் எடுத்ததாக தெரியவில்லை. பாடசாலைக்கு அண்மித்த இடங்கள், சனநெரிசல் மிக்க இடங்கள் என புதிது புதிதாக பல மதுபானசாலைகள் முளைவிடத் தொடங்கிவிட்டன. இவற்றுக்கான அனுமதியை அரசாங்கமே வழங்குகின்றது. திட்டமிட்ட ரீதியில் கலாசார சிதைப்புக்காக இந்த அனுமதி பாத்திரங்கள் வழங்கப்படுகின்றதா என்ற ஐயம் எழாமலும் இல்லை.
இவ்வாறு போதைவஸ்து பாவனை ஒருபுறம் இருக்க, வாள்வெட்டு, ரவுடித் தனம் என மோட்டர் சைக்கிள்களில் வலம் வரும் இளைஞர்குழுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கூட ஆக்கபூர்வமாக இடம்பெறுவதாக தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் ரவுடித்தனம், வாள்வெட்டு உச்ச அளவில் காணப்பட்ட நிலையில் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களின் கடும் முயற்சியினால் ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். அண்மையில் கூட வவுனியாவுக்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன் ரவுடித் தனம் செய்த பலரை யாழ்ப்பாணத்தில் உள்ளே போட்டிருக்கின்றேன். இன்னும் ஒரு 25 வீதமானவர்கள் வெளியில் இருக்கின்றார்கள் அவர்களையும் உள்ளே போட வேண்டும் என தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் ரவுடித் தனம் சில பகுதிகளில் காணப்படுகின்ற போதும் அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது. கடந்த காலத்தில் செயற்பட்ட சில பொலிஸ் அதிகாரிகள் கூட குறிப்பிட்ட சில இளைஞர் குழுக்களின் ரவுடித் தனத்திற்கு ஆதரவு வழங்கி வந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இவை எல்லாம் எமது காலசார, பண்பாடுகளை திட்டமிட்டு சிதைத்து எமது இனதை நிர்மூலமாக்கும் ஒரு செயற்பாடு. அது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற ஐயம் இருக்க, இதன் உச்சமாகவே பாடசாலை மாணவிகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் மீது இடம்பெறும் வன்புனர்வுச் சம்பவங்களும், கொலைகளும் பதிவாகியிருக்கின்றது. 1996 ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி சிதைக்கப்பட்ட பின்னர் வித்தியா மீதான வன்புனர்வு மற்றும் கொலை மிகவும் ஒரு கொடூரமான சம்பவமாக பதிவாகியிருந்தது. தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இன, மத, தேங்களை கடந்து முழு இலங்கையையும் இது உலுக்கியிருந்தது. குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்க தொடங்கியது. புதிதாக ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி மைதத்திரி பால சிறிசேன விசேட நீதிமன்றின் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது வித்தியாவின் குடும்பத்திடம் தெரிவித்தார். ஆனால் இன்று ஒரு வருடம் ஆகியும் நடந்தது என்ன…? தீர்வு இன்றி விசாரணைகள் தொடர்கின்றது. வித்தியா மட்டுமல்ல கனராயன்குளம் மாணவி சரண்ஜா, எள்ளுக்காட்டு சிறுமி, தெற்கில் சிறுமி சேயா போன்றோரின் விசாரணைகள் கூட முடிவின்றி இழுபட்டே செல்கின்றது. இது இவ்வாறான மிலேச்சதனமான செயல்களில் ஈடுபட்ட காமுகர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறானவர்களுக்கு விடுதலைப் புலிகளின் காலத்தில் வழங்கப்பட்டது போன்று கடும் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நாம் ஹரிஸ்ணவியை இழந்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் தமிழ் மக்கள் மனங்களில் தோன்றியுள்ளது.
ஆனால், இன்று வன்புனர்வு குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவு அந்தச் சம்பவம் ஹரிஸ்ணவியின் வீட்டுக் கதவையும் தட்டியுள்ளது. நாளை யாரோ..? என்ற ஏக்கத்துடன் வடக்கில் மீண்டும் கவனயீர்ப்பு ஆர்ப்பாடங்கள், ஹர்த்தால்கள் இடம்பெறத் தொடங்கி விட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரு சிறுமியை வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகிவிட்டது. முன்னர் இராணுவத்தால் தமிழ் சிறுமிகள், பெண்கள் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறிவந்த நிலை மாறி இன்று எம்மவர்களே எம் இனத்தை சிதைக்கும் வக்கிர எண்ணத்துடன் செயற்படத் தொடங்கியுள்ளனர். இவ்வாறானவர்களை எண்ண செய்ய வேண்டும்….? இந்த சிந்தனைகளுக்கு இன்ரநெற் பாவனை தொடக்கம் போதைவஸ்து வரை காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும். நீதித்துறை, பொலிசார் பக்கச்சார்பின்றி நீதியாக மக்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும். போரில் பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடிய ஒரு சமூகம் இன்று அதன் சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாக்க போராட வேண்டிய அவலநிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையை மாற்றாத வரை விடுதலைப் புலிகள் மீதான மக்களின் நம்பிக்கை, அவர்கள் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பதை தடுக்க முடியாது.
N5





