விமர்சனங்கள் தொடர்பாக கவலையில்லை : ஜனாதிபதி
அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கத்தின் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும், விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை எல்லாற்றையும் எதிர்நோக்கி நாட்டின் அபிவிருத்திப் பணிகளை உரியவாறு மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற பகமுன கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் புதிய இருமாடிக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ரஜரட்ட விவசாய மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிய தீர்க்கப்படாத நீர் பிரச்சினைக்கு தீர்வாக மொரகஹகந்த பாரிய நீர்த்தேக்கத்திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 40 வருட காலத்திற்கும் மேலாக அரசியல் மேடைகளில் வெறும் வாக்குறுதியாக மட்டுமே காணப்பட்ட இப் பிரச்சினைக்கு தற்போதைய அரசினாலேயே தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அமுலாக்கத்தின் போது அரசாங்கம் என்ற வகையில் மிகவும் முறையாகவும், வினைத்திறனான முறையிலும் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வரட்சியின் போது விவசாய மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு ஏற்கனவே அரசினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அந் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு அரசினால் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். -(3)




