செய்திகள்

இந்தியாவில் அதிக அன்பு கிடைக்கிறது என்று கூறிய அப்ரிடிக்கு வக்கீல் நோட்டீஸ்

பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக அன்பு கிடைக்கிறது என்று கூறிய அப்ரிடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
. சனிக்கிழமை கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சாகித் அப்ரிடி “இந்தியாவில் எங்கள் மீது காட்டப்படும் அன்பானது, பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிகம்” என்று தெரிவித்திருந்தார். சோயப் மாலிக்கும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அப்ரிடியின் இந்த கருத்து பாகிஸ்தானியர்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய அசார் சித்திக் என்ற லாகூரை சேர்ந்த வக்கீல், இது குறித்து கூறும் போது “அப்ரிடிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்திக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
இந்தியாவில் அப்ரிடி வெளியிட்ட கருத்து தொடர்பாக விசாரணை நடத்தும்படி பி.சி.பி.-யின் தலைவர் ஷகாரியார் கானுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அப்ரிடி தனது கருத்து மூலம் தேசத் துரோகத்தில் ஈடுபட்டுள்ளார்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா மீதான சாகித் அப்ரிடியின் காதல் வெட்கக்கேடானது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத்தும் தெரிவித்துள்ளார்.