செய்திகள்

இந்திய ரசிகர் தாக்கப்பட்டதை கண்டிக்கிறது வங்காள தேச கிரிக்கெட் சபை

 
இந்தியா மற்றும் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதம் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும் போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு வெளியே தாக்கப்பட்டார். பின்னர் இரண்டு போலீஸ்காரர்களால் தான் பாதுகாப்பாக சென்றதாக சுதிர் கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வங்காளதேச கிரிக்கெட் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்காள கிரிக்கெட் சபை கூறும்போது, ‘‘சுதிர் கவுதம் மைதானத்தை விட்டு வெளியேறும்போது வங்காள தேச ரசிகர்கள் ‘மவுகா மவுகா’ என்று குரல் எழுப்பினார்கள். ஆனால், உடல் ரீதியாக அவர் தாக்கப்பட்டார் என்பது குறித்து எந்த புகாரும் வரவில்லை” என்றார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு போட்டோகிராபர் சுதிர் தாக்கப்பட்டபோது படம் எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சரியான படம் நேற்றுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. எதுவாக இருந்தாலும், சுதிர் தாக்கப்பட்டது உண்மையெனில் இது மிகவும் துரதிஷ்ர்டவசமான சம்பவமாகும். மேலும், இதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

மிர்புர் போலீஸ் அலுவலகம் கூறும்போது ‘‘சுதிர் தாக்கப்பட்டது குறித்து எந்த புகாரும் வரவில்லை. இந்த பிரச்சினை தற்போது பெரிதாக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது போட்டியில் மேலும் அதிக அளவு அக்கறை எடுத்துக்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோம்’’ என்று கூறியுள்ளது.