செய்திகள்

டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று: முக்கிய போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 8–ந்தேதி ‘பி’ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்களில் ஜிம்பாப்வே 14 ரன்னில் ஹாங்காங்கையும், ஆப்கானிஸ்தான் 14 ரன்னில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன.

நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு போட்டி ஒன்றில் வங்காளதேசம் 8 ரன்னில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஓமன் 2 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை அதிர்ச்சிகரமாக வென்றது.

இன்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் ஜிம்பாப்வே– ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்த போதும் சென் வில்லியம்ஸ் 53 ரன்கள் குவித்து அந்த அணி நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார். 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை எடுத்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்தின் முதல் நான்கு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள். ரிச்சி 36 ரன்களும், பிரஸ்டன் மோம்சென் 31 ரன்களும் எடுத்தனர். ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஜிம்பாப்வே 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே தரப்பில் வெலிங்டன் மாகாட்ஷ நன்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.