செய்திகள்

மூன்று மாதத்திற்குள் அவசியமான உடற்தகுதியை பெறுங்கள் அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள்- இலங்கை வீரர்களிற்கு அமைச்சர் எச்சரிக்கை

எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் அவசியமான உடற்தகுதியை பெறுமாறு இலங்கை அணி வீரர்களிற்கு இலங்கையின் விளையாட்டு அமைச்சர் காலக்கெடு விதித்துள்ளார்
மூன்று மாதத்திற்குள் அவசியமான உடற்தகுதியை பெறுங்கள் அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே அணியுடனான தொடரிற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் உரிய உடற்தகுதியை பெறாதது தெரியவந்துள்ளதை தொடர்ந்தே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எந்த வீரரும் திருப்தியளிக்க கூடிய உடற்தகுதியை கொண்டிருக்கவில்லை ஆனால் அவர்களிற்கு இம்முறை ஓரு வாய்ப்பை வழங்கியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள 13 வீரர்களில் எவரும் சர்வதேச உடற்தகுதி தராதரத்தை பூர்த்திசெய்யவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்
உரிய உடற்தகுதி இன்மையே வீரர்கள் பெருமளவிற்கு காயமடைவதற்கான காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிக வேகமாக ஓடுவதற்கான உடற்தகுதியை துசாந்த சமீரவும் லகிருமதுசாங்கவும் மாத்திரம் பூர்த்தி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஓரு உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்தார் மற்றைய இரண்டிலும் அவர் சிறப்பாக செயற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் ஓருவரின் உடலில் கொழுப்புச்சத்து 16 வீதமே காணப்படவேண்டும் ஆனால் இலங்கை வீரர்கள் அனைவரும் 26 வீதத்திற்கு மேல் கொழுப்பை கொண்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் 16 வீதத்திற்கு மேல் உள்ள வீரர்களை சகித்துக்கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.