செய்திகள்

வீதியில் மாணவர்கள்! வீணடிக்கப்படும் மக்களின் பணம்

சுதாகரன் பேரம்பலம்

இப்போதெல்லாம் மாணவர்கள் வீதியில் இறங்குவது மிக சாதாரணமாக நடைபெறுகிறது. திட்டமிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மாணவர் போராட்டங்கள் ஒழுங்கு செய்ய படுகின்றன. பெரும்பாலும் மாலை வேளைகளில் அலுவலகம் முடிந்து வீடு செல்லும் மக்களின் பயணத்தை தடுத்து , போக்குவரத்து நெரிசலினை ஏற்படுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுப்பதே மாணவர் போராட்டங்களின் புதிய வடிவம். அரசியல் காரணங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு எதிரான பொது மக்களின்  வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது என்பதை மாணவர்கள் உணர மறுக்கிறார்கள்.  2005 காலப்பகுதிக்கு பின் மீண்டும் வலுப்பெறும் மாணவர் போராட்டங்கள்  வெறும் அரசியல் காழ்ப்புணர்வே என்பது யாரும் இலகுவாக அனுமானிக்க கூடிய விடயமே.

இலங்கையில் கல்வி , சுகாதாரம் போன்றவற்றிற்கு பெருமளவிலான பணம் ஒதுக்கப்படுகிறது. அரசாங்கம் இந்த பணத்தை செலவழிப்பதற்கான காரணம், அதில் இருந்து பிரதி பலனை பெறுவதற்காகவே. மனித மூலதனம் என்பது  கல்வித்  தகுதி கூடிய , சுகாதாரமான நோய்கள் அற்ற மக்களையே குறிக்கிறது. ஒரு நாட்டின் மனித மூலதனம் விருத்தி அடையும் பொது , தொழில் துறைகள்  பெருகுகிறது, அந்த நாட்டின் வினைத்திறன் அதிகரிக்கிறது, உற்பத்தி நுகர்வு அதிகரிக்கிறது, வாழ்க்கை தரம் உயர்கிறது , பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே அரசாங்கம் வளர்ச்சி அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் கல்வி, சுகாதார வசதிகளை இலவசமாக வழங்கி சிறப்பான மனித மூலதன வளத்தை உருவாக்க நினைக்கிறது.

மக்களிடம் இருந்து உறிஞ்சப்படும் பணம்

2016 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் கல்விக்காக ஒதுக்கப்பட்ட்து 90,000 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இலங்கை அரசாங்கத்திடம் போதுமான வருவாய் மார்க்கங்கள் இல்லை. அரசாங்கம் தனது செலவினங்களுக்கான நிதியை மக்களிடம் இருந்தும் , கடனாகவும் பெற்று கொள்கிறது. தினகூலிக்கு வேலை செய்து , வேர்வை சிந்தி ரூபாய் 1000 உழைக்கும் ஒருவர், அந்த பணத்தை கொண்டு வீடு செல்லும் பொது கடையில் பொருட்களை வாங்குவார் ஆயின், அவர் சராசரியாக 150-200 ரூபாயினை அரசாங்கத்துக்கு VAT வரியாக செலுத்தி இருப்பார். இப்படி ஒவ்வொரு மக்களும் தங்களின் உழைப்பினால் வழங்கும் பணத்தில் ஒரு பகுதியையே கல்விக்காக செலவிடப்படுகிறது.

ஆனால் சாதாரண மக்கள், தாங்கள் அந்த பணத்தை வழங்குகிறோம் என்று நினைப்பது இல்லை. அரசாங்கம் செலவு செய்வதாகவே நினைக்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கும் போதும், கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு செய்கையில் கல்வி நடவடிக்கைகள் வீணாகும் போதும் நட்டமடைவது மாணவர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களும் தான் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதில்லை. தங்கள் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காத ஏழை பெற்றோரும் நாட்டின் நலன்கருதி ஒரு தொகுதி மாணவர்களுக்காக தமது பணத்தை அரசுக்கு செலுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.  மக்களின் பணத்தில் படிக்கும் மாணவர்கள் அரசியல் காரணங்களுக்காக வீதியில் இறங்கி சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பது எந்த விதத்திலும் நியாயமானது இல்லை.

அரசியல் மயமாகும் கல்வி 

இலங்கையின் உயர் கல்வி துறையானது பல தசாப்தங்களாக அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. பகிடிவதை என்ற நிகழ்ச்சி நிரலின் ஊடாக இளைஞர்கள் மத்தியில் குழுக்கள் தோற்றுவிக்க படுகிறது. மாணவர்கள் அரசியல் கட்சிகளின் நிறங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறார்கள். புதிதாக செல்லும் மாணவர்களை அரசியல் மயப்படுத்த, அவர்களை மூளை சலவை செய்ய பகிடிவதை என்ற நிகழ்ச்சி நிரல் பாரம்பரியமாகவே பல்கலைக்கழக அரசியலில் பின்பற்றப்படும் முறையாகும்.

அரசியல் கட்சிகள் வறிய, பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து கல்வி கற்க வெறும் மாணவர்கள் கருத்தியலையும், சமூக பொருளாதார காரணங்களையூம் மூலதனமாகக் கொண்டு,  பல்கலைகழக முறையில் அம் மாணவர்களை அரசியல் ரீதியாக  எழுச்சி பெற செய்து  பல்கலைகழகங்களில் ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்துகின்றனர். இந்த மாணவர்களின் காரணமாகவே ஒட்டு மொத்த மூன்றாம் நிலை கல்வியும் முடக்கப்படுகிறது. மிக சாதாரணமான காரணங்களுக்கு மாணவர்கள் வீதியில் இறக்கப்படுகிறார்கள். பெறுமதி மிக்க கல்வி நடவடிக்கைகள் வெறுமனே வீணடிக்கபடுகின்றது. ஏன் இன்னும் சில பல்கலைகழகங்களில் இனவாதமும்  தூண்டப்படுகிறது.

முன்னேறிச்செல்லும் தனியார் கல்விதுறை 

தனியார் துறையினர் உயர் கல்வி துறையில் பங்கேற்பது தொடர்பான பிரச்சிணை சமகால பிரச்சினைகளில் மாற்றமடையாது ஆண்டுதோறும் காணப்படுவதுடன் அது விவாதத்துக்குறிய பிரச்சிணையாகவும் கேள்விக்குறியாகவும் காணப்படுகின்றது.

உயர் கல்வியை தனியார்மயப்படுத்தல் தொடர்பான பிரச்சிணைகளில் முன் வைக்கப்படுகின்ற பிரதானமான விவாதத்துக்குறிய விடயம் யாதெனில்  க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுள் 17% மாணவர்கள் மாத்திரமே அரச பல்கலைகழகங்களில் பிரவேசிக்ககூடியதாக இருக்கின்றது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரகாசமும் திறமையும் மிக்க ஆண்களும் பெண்களும் உயரகல்வியில் இருந்து பின்தள்ளப்படுவதுடன் நடைமுறையில் உள்ள பல்கலைகழக கல்விமுறையானது இவர்கள் அனைவருக்கும் ஒரே தடவையில் பல்கலைகழக கல்வியை பெற்றுக்கொடுக்க முடியாத சூழ்நிலையே இவ்வளவு காலமும் இருந்து வந்தது. ஆனால் இப்போது ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கும்  சிறந்த கல்வியை வழங்குகின்றன , இந்த மாணவர்களும் தொழில் சந்தையில் நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதும் , அவை அரச பல்கலைக்கழக மாணவர்களில் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதும். தனியார் கல்விக்கு எதிராக அரச பல்கலை மாணவர்கள் கிளர்ந்து எழவும், போராட்டம் நடத்துவதற்குமான  காரணங்களில்  சில. இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடு ஒன்றில், தகுந்த தொழில் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவும் இந்த காலத்தில் மற்றய மாணவனின் கல்வி கற்கும் வாய்ப்பை தட்டி பறிப்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதை பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் உணர மறுக்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும். 

எது எப்படி இருந்தாலும் , மிகவும் போட்டியான , நியாயமான உயர்தர கல்வியினூடாகவே அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் தெரிவு செய்யப்படுகிறார்கள். நாட்டின் திறமை மிக்க மாணவர்கள் உள்வாங்கப்பட்டு, அதி திறமை வாய்ந்த வளங்கள் ( விரிவுரையாளர்கள் , உட்கட்டுமானங்கள்) அரச பல்கலை காலங்களில் இருந்தும், பெருமளவிலான பொது மக்களின் பணம் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டும் மலிவான காரணங்களுக்காக மாணவர்கள் வீதியில் இறங்குவதும், வன்முறையை கையில் எடுப்பதும்  கவலைக்கு உரியதாகும்.  தேவையற்ற அரசியல் மாயைகளுக்கு விலை போகாமல், வீணாக நேரத்தை செலவழிக்காமல், கல்வி நடவடிக்கையில் மட்டும் கவனம் செலுத்துவது, போட்டி தன்மை மிகுந்த இந்த உலகில் மாணவர்கள் தங்களை உறுதியாக நிலைநிறுத்தி கொள்ள அவசியமானதாகும்.

n10