செய்திகள்

வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை

வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த மற்றும் விபத்திற்குள்ளான இலங்கையர்களுக்கு இழப்பீடு மற்றும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் வெளிவிவகார அமைச்சு தனது பொறுப்புகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, கவனக்குறைவாகவும் மெதுவாகவும் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தனது கண்காணிப்பின் மூலம் வௌிப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்தே தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் 2012 ஆம் ஆண்டு விபத்திற்குள்ளாகி முற்றிலும் ஊனமுற்ற நபரொருவருக்கு இழப்பீடு கிடைப்பதில் 10 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான வழக்குப்பதிவும் அமைச்சின் அலட்சியப் போக்கினால் பல ஆண்டுகளாக காணாமல் போனதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த போது உயிரிழந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவந்தும் குறித்த மரணம் இடம்பெற்று 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் சட்ட வைத்திய அறிக்கை பெறப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு தூதரக சேவைக்காக வெளிநாடு சென்றுள்ள பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான பாதுகாப்பு வைப்புத்தொகை, ஐந்து கோடியே ஐம்பத்தாறு இலட்சத்து 19 ஆயிரத்து 842 ரூபா பயன்படுத்தப்படாத வீடுகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

1 கோடியே 22 இலட்சத்து ஐயாயிரத்து எண்ணூற்று 75 ரூபா வைப்புத் தொகையை 20 வருடங்களாக மீளப் பெறுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

2019 ஆம் ஆண்டு மின்சார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 1 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனம் மற்றும் 2020 ஆம் ஆண்டு மோசடி செய்யப்பட்ட 2 கோடியே 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 5 வாகனங்கள் குறித்து தகவல்கள், நிதிநிலை அறிக்கைகளில் வௌிப்படுத்தவில்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற 1583 அமெரிக்க டொலர்கள் திருட்டு சம்பவத்திற்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

2021 செப்டம்பர் மற்றும் 2022 நவம்பருக்கு இடையில் அமைச்சு, மூன்று கோடியே 18 இலட்சத்து ஐம்பதாயிரத்து நூற்று அறுபத்து ஒன்பது ரூபாய் மற்றும் இரண்டு வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கான பன்னிரண்டு காசோலைகள் எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பது வௌிப்படுத்தப்படவில்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

-(3)