வெள்ளப் பகுதிகளில் மீட்புப் பணிகக்கு உதவ நிபுணர் குழுக்களையும் இந்தியா அனுப்பியது
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சுட்லேஜ் ஆகிய கப்பல்களிலும், இந்திய விமானப்படையின் சி-17 போக்குவரத்து விமானத்திலும் இந்தியா உதவிப் பொருட்களையும் மீட்பு அணிகளையும் அனுப்பியுள்ளது.
இதில், கூடாரங்கள், குடிநீர், மருந்துகள், உடுதுணிகள், மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், மீட்புப்படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் சுழியோடிகளும் இந்தக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கையை அடுத்து, வியாழக்கிழமை இரவு இந்த உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 6 மணிநேரங்களில் இரண்டு கப்பல்களும் தயார்படுத்தப்பட்டன என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு இந்தியக் கடற்படை தயார் நிலையில் உள்ளது. அவசர கோரிக்கை விடுக்கப்பட்டால் அனுப்புவதற்காக, கொச்சியில், இந்தியக் கடற்படையின் இரண்டு டோனியர் விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்திய உள்துறை அமைச்சில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அவசர கூட்டம் ஒன்றையடுத்து, விமானம் மூலம் அவசர உதவிப் பொருட்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய விமானப்படையின் கனரக போக்குவரத்து விமானமான, சி-17இல், 60 தொன் அவசர உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பை வந்தடைந்தது.
புதுடில்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை மற்றும் தேசிய அனர்த்த மீட்புப்படை ஆகியவற்றின் அதிகாரிகளும், கொழும்புக்கு வந்துள்ளனர்.
R-06




