செய்திகள்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட 150 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்: ஆணைக்குழு முன் பெண் ஒருவர் சாட்சி

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் எனது கணவருடன் சரணடைந்த  35 பேருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாது என்று பெண்ணொருவர் காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்  2 ஆம் கட்ட விசாரணை  நேற்று சனிக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இவ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

பாதுகாப்பு காரணத்திற்காக அவரது பெயரை ஆணைக்குழு வெளியிடவில்லை.  அவர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில்  ; இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009 ஆம் ஆண்டு  5 ஆம்  மாதம்  16 ஆம் திகதி நாங்கள் நந்திக்கடலுக்கு அருகில் வந்திருந்தோம். அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த எங்களை பஸ்ஸில் ஏற்றி புதுக்குடியிருப்பிற்குக் கொண்டு வந்து ஒரு இடத்தில் இருக்குமாறு இராணுவத்தினர் கூறினர்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதும் ஒரு நிமிடங்களேனும் தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாகவே முன்வந்து தங்களிடம் சரணடையுமாறு இராணுவத்தினர்  அறிவித்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஏனையவர்கள், வெள்ளைக் கொடியுடன்  சரணடைந்த நடேசன் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களை  பஸ்ஸில் ஏற்றிச்சென்று சுட்டுவிட்டார்கள். எவ்வாறு இராணுவத்திடம் சரணடைவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதனால்  இராணுவத்திடம் சரணடைய எனது கணவர் தயங்கினார். அப்போது இராணுவத்தினர் தாமாக முன்வந்து சரணடைபவர்கள் 5 நிமிட விசாரணையின் பின்னர் விடுவக்கப்படுவீர்கள்  என்று அறிவித்தனர்.

இதன் பின்னர் எனது கணவரும் அங்கிருந்து சுமார்  35 இற்கும்  அதிகமானவர்களும் தாமாகச் சென்று இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களை அங்கு இடிபாடுகளுடன்  காணப்பட்ட வீடு ஒன்றிற்குள்  இராணுவத்தினர் அழைத்துச் சென்றார்கள்.

இதன் பின்னர் எங்களை வேறு ஒரு பஸ்ஸில் ஏற்றி வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றிற்குள் கொண்டு சென்று விட்டுவிட்டார்கள்.   அங்கிருந்து எனது கணவருடைய  தகவலை பெற்றுக் கொள்ளக் கடிய வெளித் தொடர்புகள் எவையும்  இருக்கவில்லை.

முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் பல இடங்களில் தேடியும் முறைப்பாடுகள் செய்தும் எனது கணவர் தொடர்பான எந்தத் தகவலும் இன்று வரை கிடைக்கவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கின்றார். அவரை எவ்வாறாவது கண்டுபிடித்துத் தாருங்கள். வேறு ஒன்றும் எமக்கு வேண்டாம் என்று அந்தப் பெண் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.