ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைக்கு கொண்டுவருவேன் : ஜனாதிபதி
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மக்கள் மனங்களை வென்ற கட்சியாக மாற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆரம்பத்திலிருந்தே சவால்களை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகொண்ட கட்சியாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி எதிர்காலத்திலும் அவ்வாறே இடம்பெறுமென்றும் தெரிவித்துள்ளார்.
காலி நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற காலி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்தப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை வெற்றிபெற வைக்கும் பொறுப்பை உறுதியாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி , இனி இடம்பெற இருக்கும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனது சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிடுமென்றும் அனைத்து இடதுசாரி முற்போக்கு கட்சிகளையும் அணிதிரட்டிக்கொண்டு கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச்செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளின்போது பொது மக்களின் நலனுக்காக முன்னிற்பதாகவும் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்குவதுடன், மக்களின ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
வடக்கின் பிற்போக்குவாத்தையும் தெற்கின் பிற்போக்குவாதத்தையும் நிராகரித்து, அனைத்து இன மக்களும் நம்பிக்கையுடன் வாழக்கூடிய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஊழல், மோசடி, முறைகேடுகளை இல்லாதொழித்து மக்கள் பணத்தை மோசடி செய்யாது நேர்மையாக பணியாற்றுவது எப்படியென்பதனை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் நாட்டிலுள்ள அனைவருக்கும் புதிய பாடமொன்றை கற்பிப்பது கட்டாயமானதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.கடந்த அரசாங்க காலத்தில் நில்வளகங்கை திட்டத்துக்கெனக் கூறி 4012 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி விபரித்தார்.
நாட்டின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்க வேண்டுமென்று அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பாக முன்வைத்துள்ள முன்மொழிவுகளை அவரிடம் கையளித்து விசேட பிரதிநிதிகள் ஊடாக கலந்துரையாடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிக்க நடவடிக்கை எடுத்து அவற்றில் வெற்றி பெற முடியுமென உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
.
கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டின் அடையாளமாக புதிய உறுப்புரிமை அட்டைகள் ஜனாதிபதியினால் இதன் போத வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, காலி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். -(3)




