செய்திகள்

‘ஸ்பெய்ச்சர்’ விமானப்படை தள படுகொலை ஈராக்கில், 40 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

ஈராக்கில், ‘ஸ்பெய்ச்சர்’ விமானப்படை தள படுகொலை வழக்கில் 40 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஈராக்கின் திக்ரித் நகரில் அமைந்துள்ள ‘ஸ்பெய்ச்சர்’ விமானப்படை தளத்துக்குள், கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 12–ந்தேதி நுழைந்த ஐ.எஸ். இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் பிரிவு வீரர்களை தனிமைப்படுத்தி சுட்டுக்கொன்றனர். இந்த பயங்கர சம்பவத்தில் 1,700 பேர் கொல்லப்பட்டனர்.  ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆரம்ப நாட்களில் நடந்த இந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு பாக்தாத் மத்திய குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 47 பேர் மீதான வழக்கு  இந்த கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 40 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள 7 பேரை அவர் விடுதலை செய்தார்.

ஈராக்கின் தீவிரவாத எதிர்ப்பு சட்டப்படி இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக, ஈராக்கின் நீதித்துறை செய்தி தொடர்பாளர் அப்தெல் சட்டார் பய்ரக்தார் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

முன்னதாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 பேருக்கு, கடந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.