ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவு முகாம்கள்: அதிர்ச்சியளிக்கும் தகவல்களுடன் ஐ நாவிடம் அறிக்கை
” ஒரு சிரேஷ்ட எமது அறைக்குள் வந்தார். இறைச்சி சந்தையில் வைக்கப்பட்ட இறைச்சி போல எம்மில் விருப்பமான ஒருவரை தேர்ந்தெடுக்கும்படி கூறப்பட்டது. அவர் எல்லோரையும் பார்த்தார். என்னை தெரிவுசெய்தார். என்னை அவர் மற்றொரு அறைக்குள் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்”
இவ்வாறு பெண்களை பாலியல் அடிமைகளாக பாலியல் வல்லுறவு முகாம்களில் இலங்கை இராணுவம் வைத்திருந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு மூன்று பெண்களிடம் இவ்வாறு பெற்ற நேரடியான கூற்றுக்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளான 55 பெண்களிடம் பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கி நீண்ட காலத்துக்கு பெண்கள் பாலியல் அடிமைகளாக முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டமையை அறிக்கை ஒன்றில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளது.
“ஒரு அறைக்குள் ஒரு குழுவாக தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தங்களில் எவரையுமே ஒரு இராணுவ சிப்பாய் தெரிவு செய்து அருகில் இருந்த அறை அல்லது கூடாரத்துக்குள் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடிந்ததாகவும் இவர்களில் இரண்டு பெண்கள் கூறினார் ” என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“ஆறு மாதங்களுக்கு ஒரு இருட்டான அறையில் தனியாக தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அடுத்த அறையில் பெண்கள் கதறும் சத்தத்தை கேட்க முடிந்ததாகவும்” மூன்றாவது பெண் குறிப்பிட்டுள்ளார். இரு சந்தர்பப்பங்களில் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியாக மாத்திரைகள் அல்லது ஊசி மருந்து கொடுக்கப்பட்டதாக இவர்கள் கூறினார்கள். இவை கர்ப்பத்தடை மருந்துகளாக இருக்கலாம் என எண்ணியதாகவும் கூறினார்கள்.மூன்றாவது சம்பவத்தில் பாலியல் வல்லுறவால் ஒரு பெண் கர்ப்பம் தரித்தாக கூறினார்.
இவர்கள் வெவேறு தனியான இடங்களிலேயே இவ்வாறு டஹ்டுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒரு முகாம் வவுனியாவிலும் மற்றையது புத்தளத்துக்கு அருகிலும் மற்றொன்று கொழும்புக்கு வெளியேயும் இருந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை இல்லாதொழிக்கும் ஐ. நாவின் குழுவிடமேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வேறு வடிவங்களிலான பாலியல் சித்திரவதைகள் பலவும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தகவல் பெறப்பட்ட பெண்களில் 44 பெண்கள் ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோதும் 7 பெண்கள் மைத்திரியின் ஆட்சியிலும் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ மேஜர் மற்றும் ஒரு லெப்டினன்ட் உட்பட 6 இராணுவத்தினரின் விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுளள்து.
[gview file=”http://www.samakalam.com/wp-content/uploads/2017/02/Part-1-ITJP-Public-Submission-to-CEDAW-2017-1-Tamil-1.pdf”]




