ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியி்ன் எதிர்காலம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் இறங்கப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருக்கிறார். தனது தந்தை காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்
இன்று திங்கட்கிழமை முதல் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கான தனது செயற்திட்டத்தை தொடங்கப்போவதாக கூறிய அவர் தலைமையகத்தில் தனக்கென்று தனியான அலுவலகம் ஒன்றும் ஊழியர்களும் உடனடியாக ஒதுக்கித்தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவரது இந்த கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவித்தன. நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக பண்டாரநாயக்க குடும்பத்தின் ” சொத்து ” போன்று தங்களது முழுமையான ஆதிக்கத்தில் இருந்த சுதந்திர கட்சியின் தற்போதைய பரிதாப நிலை திருமதி குமாரதுங்கவுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.ஆனால், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இருக்கும் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கான அவரது செயற்திட்டம் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாகும் என்ற கேள்வி பெருமளவுக்கு மாற்றமடைந்திருக்கும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தவிர்க்கமுடியாமல் எழுகிறது.

2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுன பெற்ற மகத்தான வெற்றி சுதந்திர கட்சியின் ஆதரவுத்தளம் ராஜபக்சாக்களின் பக்கம் நகர்ந்துவிட்டதை பிரகாசமாக வெளிக்காட்டியது. ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமான இரண்டாம் இடத்துக்குவர சுதந்திர கட்சி தொலைதூர மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தின் முரண்பாடுகளும் பலவீனங்களும் பொதுஜன பெரமுனவின் அந்த வெற்றிக்கு பெருமளவுக்கு பங்களிப்புச் செய்தன. அதற்கு பிறகு அடுத்துவரக்கூடிய எந்த தேர்தலிலும் தங்களால் சுலபமாக வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் ராஜபக்சாக்கள் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்போது அவர்கள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவித்து பிரசாரங்களைத் தொடங்கிவிட்டார்கள்.ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே பொதுஜன பெரமுனவும் அதன்்தலைமைத்துவக் குடும்பமும் அடுத்த ஆட்சி தங்களுடையதே என்ற உறுதியான நம்பிக்கையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் எஞ்சியிருக்கும் சுதந்திர கட்சி அடுத்து எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறது.

கடந்த அக்டோபர் அரசியல் சதிமுயற்சிக்குப் பிறகு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிறிசேன அணி பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து பயணிக்கும் தந்திரோபாயத்தில் நாட்டம் காட்டியது.ஜனாதிபதி தலைவராக இருக்கிறார் என்பதைத் தவிர அந்த அணிக்கு வேறு எந்த ஒரு அரசியல் வல்லமையுமே கிடையாது. ஆனால், ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, சிறிசேன அணியுடன் எந்தவிதமான பேரத்தையும் செய்யவேண்டிய தேவை இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சுதந்திர கட்சி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தாலும் அதனால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் ராஜபக்சாக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்பட சுதந்திர கட்சி முன்வந்தால் பெயருக்கு ‘ கூட்டணி ‘ ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கு மாத்திரம் ராஜபக்சாக்கள் தயாராயிருக்கிறார்கள்.
பொதுஜன பெரமுனவுடன் அமைக்கப்படக்கூடிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சிறிசேனவை நியமிக்கவேண்டும் ; மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று ஒரு கட்டத்தில் சுதந்திர கட்சி கோரிக்கை முன்வைத்தது. அதை பரிசீலிக்கின்ற அளவுக்கு ராஜபக்சாக்கள் என்ன அரசியல் கற்றுக்குட்டிகளா? கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டதற்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு அதரவளிப்பதை தவிர ஜனாதிபதி சிறிசேனவுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் வேறு வழியில்லாமல் போகிறது. இன்னும் இரு வாரங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர கட்சியின் மகாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்தாக அவர்கள் கூறிக்கொண்டிருந்தாலும், எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. தனதும் சுதந்திர கட்சியினதும் தற்போதைய ” உயரத்தை” ஜனாதிபதி சிறிசேன தெரிந்துகொள்ளாதவராக இருக்கமுடியாது.தனது அரசியல் பலவீனநிலையை ஔிப்பதற்காக பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து ராஜபக்சாக்களின் நிமந்தனைகளின் அடிப்படையில் அவர் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.அதற்காக ஒரு கூட்டணி நாடகம் அரங்கேறலாம்.அவ்வளவுதான்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகி நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிின்னர் தற்போது ஜனாதிபதியுடன் இருக்கின்றவர்களில் எத்தனை பேர் வெளிப்படையாகவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்வார்களோ தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்களது அரசியல் எதிர்காலம் முக்கியமானது.அதற்கு இன்னமும் ஒருசில மாதங்களே அதிகாரத்தில் இருக்கப்போகும் ஒரு ஜனாதிபதியுடன் சேர்ந்து நிற்பது எந்தவகையிலும் அவர்களுக்கு உதவப்போவதில்லை.
இத்தகையதொரு சூழ்நிலையிலே, அடுத்துவரும் தேசியத் தேர்தல்களில் சுதந்திர கட்சி என்பது ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவுக்குள் கரைந்துவிடக்கூடிய சாத்தியமே இருக்கிறது. அதற்கு பிறகு திருமதி குமாரதுங்க எதற்கு புத்துயிரளிக்கப்போகிறாரோ? காலங்காலமாக அரசியல் அதிகாரத்தில் இருந்த தலைமைத்துவத்துடன் அண்டிப்பிழைத்த அரசியல்வாதிகள் இன்று எந்த அதிகாரமும் இல்லாத முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து சுதந்திர கட்சிக்கு புத்துயிரளிக்க முன்வரவா போகிறார்கள் ? பண்டாரநாயக்கவின் கொள்கைகள் என்று கூறிக்கொண்டு மக்களை அணிதிரட்டுவதென்பது இனிமேல் சாத்தியப்படாத ஒரு யுகத்தில் இன்று தான் வாழ்வதை திருமதி குமாரதுங்க புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக சுதந்திர கட்சி வகித்துவந்த இடத்தை இப்போது பொதுஜன பெரமுன மிகவும் வலிமையான முறையில் தனதாக்கிக்கொண்டுள்ளது என்பதே உண்மை. கடந்த வாரம் கட்சியின் தலைமையகத்துக்கு திருமதி குமாரதுங்க விஜயம் செய்தபோது அவருடன் கூடச்சென்றவர் ” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் ” அமைப்பாளர் பண்டார அத்துக்கோரள என்று செய்திகளின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான சுமார் 7 தசாப்தங்களில் அரைவாசிக்கும் கூடுதலான காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த ஒரு கட்சியைப் பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கவேண்டியிருப்பதை எப்படி.வர்ணிப்பதென்றே தெரியவில்லை.




